மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா இன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவியின் ட்வீட் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 1,037-வது சதய விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 48 மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கூடினர்.
நேற்று கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து இன்று காலை ஓதுவார் மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதனால் தஞ்சாவூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. சோழர் குலத்தின் மாணிக்கம் என்று அன்புடன் அழைக்கப்படும் அருண்மொழிவர்மன் தஞ்சை பெரிய கோவிலை கட்டி வரலாற்றில் நீங்கா புகழ் பெற்றவர். அரசரான பிறகு அவரது சாதனைகளை போற்றும் விதத்தில் அவருக்கு ராஜராஜ சோழன் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில்,"ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “ திரையில் உம்மை பிரதிபலிக்க" நான் என்ன தவம் செய்தேனோ" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ட்வீட் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.