பிக்பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதற்கட்டமாக போட்டியாளர்கள் அனைவரும் தத்தம் கதைகளைக் கூறி வந்தனர். அந்த வகையில் ராஜூ ஜெயமோகன் தம்முடைய கதையைக் கூறியிருக்கிறார். பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் மேட்ஸில் இவருடைய கதைதான் கடைசி கதையாக இருக்கிறது.
இந்நிலையில் தன் கதையை சொல்ல தொடங்கிய ராஜூ, குற்றாலம் பக்கத்தில் வலசை எனுமிடத்தில் தான் பிறந்ததாகவும், ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது தன் தாயாருக்கு பிரசவவலி வந்து, தான் பிறந்த கதையையும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் தாய், தந்தை இருவரும் இந்து - கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் வெற்றிகரமாக திருமணம் செய்துகொண்டாலும், தான் பிறக்கும்போது பெயர் வைப்பதில் சிக்கல் உண்டானதாகவும் காமெடியாக குறிப்பிட்ட ராஜூ, தனக்கு பிடித்தாற்போல் ராஜூ ஜெயமோகன் என்று மாற்றிக்கொண்டது வரை தனது கதையை தெரிவித்திருந்தார்.
குறிப்பாக தன்னுடைய தாத்தா மேடை நாடகத்தில் ஆர்வமாக இருந்த தந்தையின் கனவுக்கு வேலி போட்டதாகவும், அடுத்து தான் கல்லூரி படிக்கும் பொழுது எடுத்த ஒரு குறும்படம், அந்த படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் வருகை தந்ததையும் குறிப்பிட்டார். அப்போது பாஜ்யராஜிடம் அறிமுகமானதையும், பாக்யராஜ் ராஜூவை தன்னுடன் பணிக்கு சேர்த்துக் கொண்டதையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறும்போது பாக்யராஜ் மாதிரி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுகிறார் ராஜூ.
இதன் காரணமாக முதல் குருநாதராக பாக்யராஜை குறிப்பிட்ட ராஜூ, 2வது குருநாதராக நெல்சனை குறிப்பிடுகிறார். அதன் பிறகு விஜய் டிவி ஆடிஷன்களில் ஏற்பட்ட அனுபவங்களை கூறிய ராஜூ, தொடர்ந்து சீரியல்களில் நடித்ததைப் பற்றியும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தன் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு துணையாக, தன் நிழலாக இருந்து சப்போர்ட் பண்ணும் தன் மனைவியின் ஊக்கத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக ராஜூ பேசும்போது, பிக்பாஸ்க்கு எப்படி கண் ஃபேமஸோ, அதேபோல் தானும் கண்ணுக்கு ஃபேமஸ் என்று ராஜூ தெரிவித்துள்ளார். இவருடைய கதைக்கு அநேகமான ஹவுஸ்மேட்ஸ் லைக் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.