குழந்தையின் காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்.. இது தான் காரணம்! நெகிழ வைக்கும் பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை குறித்தும் அடுத்து நடித்து வரும் சந்திரமுகி-2 படத்தின் அப்டேட் குறித்தும் சில நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

Advertising
>
Advertising

அந்த அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust )  அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி  வருகிறேன்.

இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust )  அறக்கட்டளைக்கு  உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று  கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது ஆதரவாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!. அனைவருக்கும் என் இதயப்பூர்வமான  நன்றிகள். சேவையே கடவுள்.. அன்புடன் ராகவா லாரன்ஸ்." என அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று ராகவா லாரன்ஸ் மீண்டும் ஒரு நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன். நீண்ட நாட்களாக எனக்குள் இந்த ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தேன். நாளை அதற்கான முதல் அடி எடுத்து வைக்கிறேன்.

பொதுவாகவே ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுந்து உதவி கேட்பதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், அந்தப் பணக்காரர்கள் தங்களுக்கு உதவி செய்த பிறகும் அவர்கள் மீண்டும் அவ்வாறே செய்கிறார்கள், இதுபோன்ற சில சம்பவங்களால் மட்டும் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை. என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களும் இதற்கு காரணம். அவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என்னிடம் வரும்போது என் கால்களில் விழவந்தனர். நான் விலகிச் சென்று, உதவி தேவைப்படும் அந்த குழந்தையைப் பார்த்தேன், அந்த குழந்தை தனது பெற்றோர் என் காலில் விழுந்தவுடன் உடனடியாக அழத் தொடங்குகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஏனென்றால் குழந்தைகளுக்கு முன்னால் எந்த அப்பாவும் ஹீரோவாகவே விரும்புவார்கள். பணக்காரர்களிடம் பணம் இருப்பதாலேயே, பெற்றோர்கள் அவர்களின் காலில் விழுவதை நான் காண விரும்பவில்லை.

வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை என் காலில் விழவைக்கிறார்கள், குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்புகிறவன் நான்..  அதனால் கடவுள் என் காலில் விழுவது போல் அப்போது உணர்ந்தேன்.

சில சமயங்களில் நான் கிராமங்களுக்குச் சென்று என் தாயின் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களும் அதையே செய்கிறார்கள். இது சரியானதா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், எனவே நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில்தான் நான் விழுந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவேன்.

எனது சிறிய ஈகோவும் மறைந்து போனது. நாளைமுதல் நான் எனது ரசிகர்களைச் சந்தித்து இந்த மாற்றத்தை எனக்குள் கொண்டுவர ஒரு சிறு முயற்சியை மேற்கொள்வேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை, இது தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன், "சேவையே கடவுள்". என்றென்றும் ராகவா லாரன்ஸ்" என குறிப்பிட்டுள்ளார்.

லாரன்ஸ், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் 'சந்திரமுகி 2'  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸூடன் நடிகர் வடிவேலு இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Actor Raghava Lawrance Latest Statement about service is god

People looking for online information on Raghava Lawrance will find this news story useful.