தமிழில் மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பிருத்விராஜ்.
அதே போல் தமிழில் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் நடித்த நடிகை அனிகா, இவர்களுடன் உன்னி முகுந்தன் போன்ற மலையாள நடிகர்கள் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவு தற்போது சர்ச்சையாகி உள்ளது.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு (பேரியாறு) அணையின் உச்சபட்ச உயரம் 155 அடி. அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். தற்போது 142 அடிவரை நீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
125 ஆண்டுகள் மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். கேரளா இரண்டாக பிளந்துவிடும் என, கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கேரளாவில் கடந்த நாட்களாக பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர் கடிதம் எழுதினார். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும் என மலையாள நடிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் நடிகர் பிருத்வி ராஜ் #DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ''உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொருட்படுத்தாமல் 125 வருட அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருக்க காரணமோ மன்னிப்போ இல்லை! நாம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஒருபுறம் வைத்து எது சரியானதோ அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும், சிஸ்டம் சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம்!'' என்று கூறியுள்ளார்.