நேற்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபு கலந்து கொள்ளவில்லை.
அவரது குடும்பத்தில் இருந்து பிரபுவின் அண்ணன் ராம்குமார் அவரது மகன் விக்ரம் பிரபு மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் பிரபு விழாவில் கலந்து கொள்ளாததால் அவருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் ஏன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், '' அப்பாவோட மணிமண்டபத்துக்கு என்னால வரமுடியல. கால்ல ஒரு சின்ன அடிபட்டு இருந்தது. அதனால தான் வரல. மத்தபடி எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. வீட்ல தான் இருக்கேன். நல்லா இருக்கேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.