90கள் முதலே சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் பொன்னம்பலம். பல திரைப்படங்களில் ஜிம் பாயாக தோன்றிய பொன்னம்பலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் வில்லனாக நடித்தார். பொன்னம்பலம் என்று சொல்வதைவிட ‘கபாலி’ என்று சொன்னால் தான் பலருக்கும் தெரிந்த ஒரு வில்லன் நடிகராக பரிச்சயமானவர் நடிகர் பொன்னம்பலம். இடையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.
அண்மையில் பொன்னம்பலத்திற்கு கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் தனக்கு உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் பொன்னம்பலத்தின் 2வது அக்கா மகனும் விளம்பர பட இயக்குநருமான ஜெகந்நாதன் (35) தன் மாமா பொன்னம்பலத்துக்காக தனது சிறுநீரகத்தை கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ் ஆகிய நடிகர்கள் பொன்னம்பலத்துக்கு நிதி உதவி செய்தனர். அவர்களுக்கும் நன்றி சொல்லியிருந்தார் நடிகர் பொன்னம்பலம்.
தற்போது பிஹைண்ட்வுட்ஸில் பேட்டி அளித்திருக்கும் நடிகர் பொன்னம்பலம், தன்னை தன் மாற்றாந்தாயாரின் சகோதரரே ஸ்லோ பாய்சன் வைத்தும் செய்வினை வைத்தும் கொல்ல நினைத்ததாக தெரிவித்திருந்தார். பின்னர் அவரை மன்னித்து விலகிவிட்ட பொன்னம்பலம் இதற்கு காரணம் கூறும்போது, “என்னுடைய 27 வது வயதில் நான் வீடு கட்டினேன். அது அவருக்கு செரிமானமாகவில்லை போலிருக்கிறது. அதனால் இப்படி அவர் நினைத்திருப்பது தெரிய வந்து அதிர்ந்தேன். எனினும் என்னதான் செய்வினை வைத்தாலும் கடவுள் என்னுடன் இருந்திருக்கிறார், மக்களின் அன்பும் ஆதரவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் பேசியிருக்கும் நடிகர் பொன்னம்பலம், “நான் மிகப்பெரிய வலிகளை அனுபவித்து பின்னர் கடவுள் அருளாலும் ரசிகர்களின் பேரன்பாலும் இத்தனை பெரிய இக்கட்டான அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு தேறி வருகிறேன். ஆனால் நான் நலமுடன் குணமாவது சிலருக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது. சில செய்திகளை காண முடிகிறது. நான் இறந்து விட்டேன் என்று சொல்கிறார்கள். ஒரு பொம்பள இந்த மாதிரி செய்தியை ஊடகத்தில் குறிப்பிட்டதையும் காண முடிந்தது. வேறு நல்ல செய்திகளை போடலாம், பாசிட்டிவாக போடலாம்” என்று வருத்தப்பட்டார்.
மேலும் பேசிய பொன்னம்பலம், தனக்கு தெரிந்த பலர் தனக்கு நேரில் வந்தோ, போன் பண்ணி கூட நலம் விசாரிக்கவில்லை என்றும் தன்னைப் பொறுத்தவரை பணம் இரண்டாம் பட்சம்தான் என்றும், ஒரு கஷ்டம் நேரும் போது உறுதுணையாக இருப்பதைதான் தான் முதலில் பார்ப்பதாகவும் குறிப்பிட்ட அவர், தன்னை கண்டு கொள்ளாத சிலர் பற்றி தான் அக்கறை கொண்டிருந்ததாகவும், தான் கண்டுகொள்ளாத சிலர் தன் மீது அக்கறையுடன் நலம்விசாரித்ததாகவும், அவர்களை தற்போதுதான் புரிந்து கொண்டதாகவும் கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். பொன்னம்பலம் பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.