ஆந்திர பிரதேச நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின், வாக்கு எண்ணிக்கை இன்று (மே.23) ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை பிடிக்கும் நிலையில் உள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசமும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் பிரதான கட்சியாக விளங்கிய நிலையில், மூன்றாவதாக நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி தனித்து போட்டியிட்டது.
மேற்கு கோதாவரியிலுள்ள பீமாவரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் கோதாவரி மாவட்டத்திலுள்ள கஜுவாகா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட பவன் கல்யாண், 3வது இடத்தையே பிடித்துள்ளார். மேலும், பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சியினர் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர்.