தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பன்முக நடிகர் பசுபதி. குணச்சித்திர வேடங்கள் ஆகட்டும், வில்லனாகட்டும், ஹீரோவாகட்டும் எந்த கேரக்டரையும் தன் அநாயச நடிப்பில் அசராமல் தூக்கி நிறுத்தும் அசாத்திய திறமைசாலி பசுபதி.
பசுபதி நடிப்பில் விருமாண்டி, வெயில், அரவான் உள்ளிட்ட திரைப்படங்கள் முத்திரை பதித்த முக்கிய திரைப்படங்கள். இந்த நிலையில் அண்மையில் தமன்னா நடித்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன் கேரக்டரை நிறைவு செய்திருந்தார்.
தற்போது தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் முக்கிய கேரக்டரில் பசுபதி நடித்துள்ளார்.
எழுபதுகளில் வடசென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பாக அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் உருவாகியுள்ளது ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தில் சார்பட்டா பரம்பரையின் பாக்ஸிங் வாத்தியாரான ரங்கன் கேரக்டராக நடித்துள்ளார் பசுபதி.
இதுபற்றி பேசியுள்ள பசுபதி, “தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் திரைப்படமாக கொண்டுவருபவர் பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.
ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லை என்பதையும் பசுபதி உறுதிப்படுத்தியதுடன், இந்த தகவலை PRO ஜான்சன் மூலம் ஊடகங்களிடையே பகிர்ந்துள்ளார்.