நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் சினிமா திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைபிரபலங்கள் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி மக்களை சிரிக்க வைத்தவர். இந்த சூழ்நிலையில் அவருடைய இழப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் ஏரியா மக்கள் நம்முடைய சேனலிடம் கண்ணீருடன் அவருடைய ஞாபகங்கள் குறித்து பேசி இருக்கின்றனர். அப்போது கார் ஓட்டுனர் ஒருவர் "பெங்களூருவில் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தோம். எனக்கு அப்போது மாத சம்பளம் தான். மயில்சாமி அண்ணன் காரில் இருந்த போது எனக்கு மனைவியிடம் இருந்து போன் வந்தது. சாப்பாட்டிற்கு பணம் வேண்டும் என அவர் கூறினார். செல்போனில் இருந்த அதிகப்படியான சத்தத்தினால் இதனை மயில்சாமி அண்ணன் புரிந்து கொண்டார். எதுவுமே சொல்லவில்லை. கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து முதலில் இது அவங்க கிட்ட கொடு என சொல்லிவிட்டார். என்னை பொறுத்தவரையில் அவர் ஒரு சின்ன எம்ஜிஆர்" என்றார்.
வயதான முதாட்டி ஒருவர் பேசுகையில் "ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சர்ச்சுக்கு செல்வது வழக்கம். அதன் பின்னர் எங்களை அவர் பார்த்தால் என்ன சாப்பாடு இன்னைக்கு என உரிமையுடன் கேட்பார். சாம்பார் என்று சொன்னால் இங்கேயே இருங்க. நான் போயிட்டு சாப்பாடு வாங்கிட்டு வரேன் எனக் கூறி சற்று நேரத்தில் சாப்பாடுடன் திரும்பி வருவார். அப்படி எங்களது வீட்டில் ஒருவர் போல இருந்தவர். அவரது உடல் தூக்கிச்செல்லப்படுவதை பார்த்து கதறி அழுதேன். என்னுடைய சகோதரர் போன்றவர் அவர்" என்றார்.
தூய்மை பணியாளர் ஒருவர் நடிகர் மயில்சாமியின் மறைவு குறித்து பேசுகையில்," எங்களைப் போன்றவர்களை அவர் சாலையில் பார்த்தால் தோளில் கை போட்டு நண்பனை போல பேசுவார். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எப்போதும் எங்களை பார்த்தாலும் சாப்டியா என்றுதான் முதலில் கேட்பார்" என நான் தழுதழுக்க பேசினார்.
மற்றொரு நபர் பேசுகையில்," என்னுடைய மகளுக்கு படிப்பு செலவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அவளுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தார். எப்போது என்னை பார்த்தாலும் உரிமையுடன் என்ன பண்ற? சாப்டியா என்ன கேப்பார். இனி யார் இனி கேட்கப் போகிறார்கள்?" என கண்கலங்கியபடி பேசினார். அதேபோல அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் "கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். அதேபோல சென்னையில் வெள்ளம் வந்த போது கிட்டத்தட்ட 2000 பேருக்கு சாப்பாடு சமைத்து அவர்களின் பசியை போக்கியவர். அவர் இல்லை என நினைக்கும் போது மனது வலிக்கிறது" என உருக்கமாக பேசியுள்ளார்.