நடிகர் சூர்யாவின் 2D Entertainment , நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி விருமன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறார். நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’. இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.
‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, மைனா நந்தினி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் பகுதிகளில் படப்பிடிப்பின் நடுவே நடிகர் கார்த்தி யை ரசிகர்கள் சந்தித்தனர். அந்த புகைப்படம் வைரலானது. ஹீரோ வீடு போல செட் அமைத்து பெரிய பந்தி காட்சியும் படமாக எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விருமன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி பழம்பெரும் நடிகை சரோஜா தேவியுடன் இருக்கும் BTS புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்திற்கு நடிகர் கார்த்தி டப்பிங் பேசும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.