மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு - 2020 பெரு நிறுவனங்களுகக்கு சாதகமாக உள்ளதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது.
நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும் ?
நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கொரோனா வைரஸ் எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும் ?