தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கார்த்தி ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக கிடப்பில் இருந்த கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
4 மாடி கட்டிடத்தில் ஆடிட்டோரியம், சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளது. இதன் கட்டுமான பணிக்காக சென்னையில் செலிப்ரிட்டி கிரிக்கெட், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினர். தற்போது இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க பணத்தேவை இருப்பதால் மீண்டும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன்.23ம் தேதி நடைபெறவுள்ளதால் கலை நிகழ்ச்சி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்டிட பணிகளை விரைந்து முடிக்க நடிகர் சங்க பொருளாலரும், நடிகருமான கார்த்தி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அதேபோல் நடிகர் விஷாலும் ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.