பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் குறித்து கமல் அதிரடியான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு அனைவரும் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச் அல்லது அகல் விளக்கு ஏற்றி கொரொனாவுக்கு எதிரான நம் ஒற்றுமையை காட்டுவோம் மற்றும் நமக்காக உழைக்கும் நிஜ ஹீரோக்களுக்கு நன்றி செலுத்துவோம் என பிரதமர் மோடி கூறியதையடுத்து, நேற்று இரவு பலர், அவர் சொன்னதற்கேற்ப விளக்குகளை ஏற்றினார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமல் அதிரடியான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நான் உங்களை நம்பினேன். அது தவறு என நிருபனமானது. இப்போது இந்த ஊரடங்கு நேரத்திலும் உங்களை முழுமையாக நம்பினேன், ஆனால் காலம் இப்பொழுதும் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என நிருபித்து இருக்கிறது. பணமதிப்பிழப்பால் பல ஏழைகளின் வாழ்வாதாரமும் சேமிப்பும் அழிந்தது போலவே, இந்த சரியான திட்டமிடப்படாத ஊரடங்கு பலரது வாழ்க்கையை அழிக்க வழிவகுத்து வருகிறது. ஒருபக்கம் நீங்கள் வீட்டில் விளக்கை ஏற்ற சொல்கிறீர்கள். ஆனால் இன்னொரு பக்கம் சமைக்க கூட எண்ணெய் இல்லாத மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் பால்கனி மக்களுக்கான பால்கனி அரசாக இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இது போன்ற தேவையற்ற செயல்களை விட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நான் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன். ஒரு பிரச்சனை பெரியதாகும் முன்பே அதற்கான தீர்வுகளை ஆராய்பவர்தான் ஒரு தொலை நோக்கு பார்வையுள்ள தலைவர். டிசம்பர் மாதமே சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. ஜனவரி 30-ல் இந்தியாவில் முதல் கேஸ் ரிபோர்ட் செய்யப்பட்டது. இவ்வளவு நேரமிருந்தும், வெறும் 4 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது.!
இந்த முறை உங்கள் பார்வை தோல்வி கண்டிருக்கிறது. இதற்காக என்னை தேசத்திற்கு எதிரானவன் என்று சொன்னாலும் பரவாயில்லை. இது பேச வேண்டிய நேரம். அதே போல இந்த சமயம் அக்கறை உள்ளவர்களின் வார்த்தைகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும். நமது பலமே நமது மக்கள் சக்திதான். அதை வைத்து நாம் இந்த கடிணமான சூழலில் இருந்து மீண்டு வர வேண்டும். நாங்கள் கோபமாகதான் இருக்கிறோம். ஆனாலும் உங்கள் பக்கம் நிற்கிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.