பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.
இந்நிலையில் எஸ்.பி.பியின் மறைவுக்கு நடிகர் கமல் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''வெகு சில பெரும் கலைஞர்களுக்கே, தான் வாழும் காலத்திலேயே, அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப்பெற்றவர், என் உடன்பிறவா அண்ணன் திரு.எஸ்.பி.பி அவர்கள். நாடுதழுவிய போர் மழையில் நனைத்தபடியே அவரை வழியனுப்பி வைத்த, அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களின் ஒருவனான எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் நனைத்த மழையில், கொஞ்சத்தை நானும் பகிர அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவரின் குரலின் நிழல்பதிப்பாக, பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர் ஏழு தலைமுறைகளுக்கும் அவர் புகழ் வாழும்'' என அவர் தெரிவித்துள்ளார்.