சென்னை: நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் விக்ரம் படப்பிடிப்பு, பிக்பாஸ் என தொடர்ந்து பணியாற்றி வரும் கமல்ஹாசன், மீண்டும் சினிமா படங்கள் தயாரிப்பிலும் களமிறங்கி உள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று வருகிறார். பொது உடல் பரிசோதனை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். அதில் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.
அப்போது கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், “சுவாச பாதை தொற்று & காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக SRMC-யில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. ” என குறிப்பிடப்பட்டது.
பின்னர் (01.12.2021) அன்று கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்ட போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்தது. அதில்" நவம்பர் 22, 2021 அன்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு கோவிட் பாசிட்டிவ் இருந்தது. அவருக்கு லேசான கோவிட் இருந்தது, அதற்காக அவர் சிகிச்சை பெற்றார். அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார், ஆனால் டிசம்பர் 3, 2021 வரை தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். டிசம்பர் 4, 2021 முதல் தனது வழக்கமான வேலையைத் தொடங்க அவர் தகுதியுடையவராக இருப்பார். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி டிசம்பர் 4 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.