நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
ஜெய்
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஜெய். சென்னை 28, சுப்ரமண்யபுரம், எங்கேயும் எப்போதும் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த படங்களும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. நடிப்பு மட்டும் இல்லாமல் இசை, கார் ரேஸ் என்ற மற்ற துறைகளிலும் அவர் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றார்.
ஜெய் சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் இருந்து வந்தார். ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.
பட்டாம்பூச்சி…
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையாக தற்போது உருவாகி வரும் ‘பட்டாம்பூச்சி’ படத்தில் ஜெய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, முதன்முறையாக சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்டங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி ஜெய் Behindwoods சேனலுக்கு அளித்துள்ள நேர்காணல் இணையத்தில் கவனம் பெற்றது.
18 வருட கனவு…
அந்த நேர்காணலில் நடிப்பு, கார் ரேஸ் மற்றும் இசை என தான் ஆர்வமாக ஈடுபட்டு வரும் துறைகள் பற்றி பேசியுள்ள ஜெய், அதில் “இசையமைப்பாளராக ஆகவேண்டும் என்பது எனது 18 வருட கனவு. பகவதி படத்துக்கு முன்பே நான் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் 5 ஆவது கிரேட் வரை படித்துள்ளேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பில் ஆர்வமும் வாய்ப்புகளும் வந்ததால் இசையமைக்க முடியவில்லை. கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்வதால் நடிப்பு பாதிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் நடிப்பால்தான் சரியாக கார் ரேஸ் பந்தயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.