100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ நடிகர் துல்கர் சல்மான் முன்வந்திருக்கிறார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Also Read | "நடிப்பிற்கு தற்காலிக ஓய்வு".. ஆமீர்கான் அறிவிப்பு.. அடுத்த பிளான் இதுதானா?.. வெளியான தகவல்!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் மம்முட்டி. இவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு 'செகண்ட் ஷோ' படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் இவர் நடித்து வெளிவந்த சீதாராமம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், துல்கர் சல்மான் தனது குடும்பத்தினருடன் இணைந்து முக்கியமான திட்டத்தில் இறங்கியுள்ளார். இதன்மூலம், தீவிரமான உடல் உபாதைகளை சந்தித்துவரும் 100 குழந்தைகளுக்கு உதவ இருக்கிறது துல்கரின் குடும்பம். Aster Medcity, கைட்ஸ் அறக்கட்டளை மற்றும் துல்கரின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films ஆகியவை இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
'Wayfarer’s Tree of Life' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 100 குழந்தைகளுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சார்ந்த குழந்தைகளில் சிறுநீரகம், குடல் மற்றும் இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த திட்டம் மூலம் உதவி செய்யப்பட இருக்கிறது.
இந்த திட்டத்துக்கான சின்னத்தை இந்த குழுவினர் சமீபத்தில் அறிவித்திருக்கின்றனர். நடிகர் துல்கர் சல்மான் முன்னிலையில் வேஃபேரர் பிலிம்ஸ், மெட்சிட்டி மற்றும் கைட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து இந்த திட்டத்திற்கான சின்னத்தை வெளியிட்டனர். இதனிடையே துல்கர் சல்மானின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. நடிகை மீனாவின் உருக்கமான பதிவு.!