நடிகர் தனுஷ் தனது இரு மகன்களோடு இளையராஜாவின் ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டுள்ளார்.
ராக் வித் ராஜா
இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இளையராஜாவுக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை இளையராஜா கடந்த வருடங்களில் நடத்தி வந்துள்ளார். இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அவரின் இசைக் கச்சேரிகள் நடந்தன. அதில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இளையராஜாவும் ரஹ்மானும்
'இளையராஜா 75' நிகழ்ச்சியில், இளையராஜாவுடன் மேடையை பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான். அப்போது, புன்னகை மன்னன் படத்தில் வரும் பின்னணி இசையை, ஏ.ஆர். ரஹ்மான் மேடையிலேயே வாசித்துக் காட்டினார். இது அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது.
இளையராஜா 75 நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததை அடுத்து இப்போது மீண்டும் சென்னையில் ராக் வித் ராஜா என்ற கச்சேரி நடக்க உள்ளது.இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் மார்ச் 18 ஆம் தேதி நேற்று அவரது ராக் வித் ராஜா இசைக்கச்சேரி நடந்தது. இந்த இசைக்கசேரியில் முன்னணி இசைக் கலைஞர்களான மனோ, விபாவரி, உஷா உதூப், பவதாரணி, தேவி ஸ்ரீ பிரசாத், சுவேதா மோகன், எஸ்பி சரண், கார்த்திக் ராஜா, யுவன் மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தனுஷ்…
இளையராஜாவின் கச்சேரியில் எப்போதும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள். இளையராஜாவின் வெறித்தனமான ரசிகர் என்று தன்னை பலமுறை நடிகர் தனுஷ் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த கச்சேரியில் அவர் சர்ப்ரைஸாக கலந்துகொண்டார். விழாவுக்கு தன்னுடைய இரு மகன்களோடு வந்திருந்தார் அவர். இந்நிகழ்ச்சியில் அவர் மகன்களோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜா தனுஷ் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலம் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அதுபோலவே தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் தனுஷ் எழுதிய மாரியின் ஆனந்தி பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்திய 3 மற்றும் வைராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.