80களின் இறுதியில் இருந்தே இளைஞர்களின் விருப்பமான காமெடி நடிகராக மலர்ந்து 90ஸ் கிட்ஸின் அதி விருப்பமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் சார்லி. பல முன்னணி ஹீரோக்களின் நண்பராகவும் நடித்துள்ளார்.
இன்றும் சளைக்காமல் பல திரைப்படங்களை நடித்து வரும் சார்லி தனக்கே உரிய நடிப்பு பாணியில் கலக்கி வருகிறார். இந்நிலையில் சார்லியின் பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டது வைரலானது. அதில் "இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்ற பதிவு குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் பலரும் இது ‘போலி’ அக்கவுண்ட் என பச்சையாக தெரிகிறது என்று கூறி வறுத்தெடுத்தனர். இதற்குக் காரணம் அந்த கணக்கில் 2020-ஆம் வருடம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த நிலையில் தான், தனது பெயரில் தனது அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கு தொடர்பாக காவல்துறையில் சார்லி புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் இப்படி அவ்வப்போது சில நபர்களால் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தரப்பிலிருந்து உடனடியாக மறுப்பு தெரிவிப்பார்கள். அண்மையில் நகைச்சுவை நடிகர் ஜனகராஜ், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் போலி கணக்குகள் வலம் வந்தன. ஆனால் உண்மையில் அவர்கள் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கவில்லை என ஜனகராஜ் தரப்பில் இருந்து தாதா87 பட இயக்குநரும், மணிரத்னம் தரப்பில் இருந்து நடிகை சுஹாசினியும் விளக்கங்கள் அளித்தனர். இந்நிலையில் தான் தற்போது இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று காவல்துறையில் சார்லி புகார் அளித்துள்ளார்.
இது தொடர்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கடந்த 40 வருடங்களுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடித்து வரும் தான் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்றும் தன் பெயரில் தன் அனுமதியின்றி இன்று (ஜூன் 11) தொடங்கப்பட்டுள்ள போலி ட்விட்டர் கணக்கு (https://twitter.com/ActorCharle) கணக்கை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்வதாக சார்லி குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: நயன்தாராவின் 'நெற்றிக்கண்'.. திரைப்படம் நேரடியாக பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? உண்மை என்ன?