கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸினால் நேற்றைய தினம் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாரதாரத்துறை அறிவித்துள்ளது. மக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் சந்திரமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள்விடுத்திருந்தார். அந்த பதிவில், ''டெல்லியில் பீட்சா டெலிவரி செய்து வந்த டெலிவரி பாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெலிவரி செய்த 70 வீடுகளை அரசு தனிமைப்படுத்தியுள்ளது.
எனவே டோமினோஸ், ஸ்விகி மற்றும் கொரியர் சேவைகளையும் கட்டுப்படுத்துங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார். இல்லையெனில் இந்த தனிமைப்படுத்துதல் எந்த பலனையும் அளிக்காது. இது அடிப்படை தேவையில்லை'' என்றும் தெரிவித்தார்.
நடிகர் சந்திரமௌலியின் கருத்தை ஆமோதித்த பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், மளிகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது மற்றவர்களிடம் இருந்து இடைவேளைவிட்டு நிற்க வேண்டும் என்றார்.