தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பாலா சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களிலும், சில மலையாள படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1995ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் மூலம் நாசர் இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும், நெகட்டிவ் ரோல்களிலும் நடித்த இவர் 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியன், தீனா, புதுப்பேட்டை, விருமாண்டி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
67 வயதான பாலா சிங் ஃபுட் பாய்சனிங் காரணமாக வடபழனி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இன்று மாலை வரை விருகம்பாக்கம் காவல்நிலையத்தை அடுத்துள்ள வீட்டில் அவர் உடல் பார்வைக்கு வைக்கப்படும். பின்னர் அந்திம சடங்குகளுக்காக உடல் நாகர்கோவில் எடுத்து செல்லப்பட உள்ளது.