சின்னத்திரை நடிகர் பப்லு ப்ரித்விராஜ் 23 வயது பெண்னை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் அவர்.
1971-ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்லூ பிரித்விராஜ், தொடர்ந்து சிவாஜி, ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பப்லு ப்ரித்விராஜ், மர்மதேசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்டரி ஆனார். தொடர்ந்து, வாணி ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த இவர், தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார்.
மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள பப்லு ப்ரித்விராஜ் கடந்த 1994-ம் ஆண்டு பீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆஹத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பலரும் பரபரப்புடன் பேசிவந்த நிலையில், நடிகர் பப்லு ப்ரித்விராஜ் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுபற்றி பேசியுள்ள அவர்,"கடந்த சில நாட்களாகவே பலரும் எனக்கு போன் செய்து மலேசிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டீர்களாமே? என கேட்டு வருகின்றனர். நான் அப்படியா? என பதில் அளித்து வந்தேன். ஏதோ ஜோக் பண்றாங்கன்னு நெனச்சேன். ஆனால் அது சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. இன்றைய காலகட்டம் அப்படியானது. எதுவுமே நான்கு சுவர்களுக்குள் இருப்பதில்லை. உடனே உலகம் முழுவதும் அது பரவி விடுகிறது. அப்படித்தான் எனக்கும் போன் செய்து மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்களா? என கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் போது திருமணம் செய்துகொள்ள போகிறேன். ஆனால் இப்போது இல்லை. அதைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை என எத்தனை பேருக்குத்தான் விளக்கம் சொல்வது? எனக்கென தனி வாழ்க்கை இருக்கிறது. சினிமா துறையில் இருப்பவர்களுக்கு என ஒரு கெட்ட பெயர் இருக்கிறது. சிலரது தனிப்பட்ட பிரச்சனைகள் வெளி உலகத்திற்கு வருகின்றன. நான் அப்படி இருக்கக் கூடாது என நினைத்தேன். என்னுடைய வாழ்க்கை தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். நான் எப்போதுமே எதையுமே வெளிப்படையாகவே செய்பவன். திருமணம் செய்வதாக இருந்தால் உங்களுக்கு தெரிந்து, உங்களுடைய ஆசிர்வாதப்படியே அது நடக்கும்" என தெரிவித்துள்ளார்.