’இந்த வருஷம் சம்பளமே வேண்டாம்!’ நடிகர் அதிரடி முடிவு - பெரிய மனசு வேண்டும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுசீந்திரன் இயக்கத்தில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் அறிமுகமானவர் அருள் தாஸ். தொடர்ந்து ‘ராஜபாட்டை’, அழகர்சாமியின் குதிரை என்று சுசீந்திரனுடன் தொடர்ந்தாலும், தென்மேற்கு பருவக்காற்று, பாபநாசம், தர்மதுரை, வேலைக்காரன், மகாமுனி என்று பல படங்களில் நடித்து வந்தார். சூது கவ்வும் மற்றும் பாபநாசம் படங்களில் இவரது கதாபாத்திரம் அதிக கவனம் பெற்றது.

கொரோனா பிரச்னையால் திரைத்துறையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்க, நடிகர் அருள்தாஸ் தனது பங்களிப்பாக இந்த ஆண்டு இறுதிவரை அவர் நடிக்கக் கூடிய படங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது :

''மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த கட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..! வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்!

இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான்.

இந்த நேரத்தில் எனக்கு சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த  மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகம் முழுக்க 'கோவிட்-19' என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கி விட்டது. ஆனாலும் நம் திரைத்துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை அனைவருக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. நானும்  என்னைச் சுற்றி இருக்கும் நம் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும். அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும்  அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. இது ஒரு நல்ல துவக்கம்! அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு  சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பலகோடிகள் சம்பாதிக்கும்  நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.

எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்கு பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..! நன்றி

இவ்வாறு நெகிழ்ச்சியாக அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Arul Dass

Actor and Cinematographer Arul Das decides to work with no pay till dec 2020 | இந்த ஆண்டு முடியும் வரை சம்பளம் வேண்டாம் சூது காவ்வும் நடிகர் அ

People looking for online information on Arul Dass will find this news story useful.