இங்கிலாந்தில் நடிகர் அஜித் பைக் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் பயணம் மேற்க்கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த வருடம் அஜித்தின் மேனேஜரும் நண்பருமான சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல பைக் ரைடரும், உலக சாதனையாளருமான மாரல் யாசர்லூவை அஜித் சந்தித்ததை பகிர்ந்து இருந்தார். அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்லும் திட்டத்தையும் அப்போது அறிவித்து இருந்தார்.
மாரல் யாசர்லூ, உலகம் முழுவதும் பைக்கில் 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் கடந்து சென்றவர் ஆவார். இவரைதான் ‘தல’ அஜித் டெல்லியில் சந்தித்து மாரல் யாசர்லூவின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொண்டார். எதிர்காலத்தில் தனது மோட்டார் பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் அஜித், அவருடைய ஆலோசனைகளைப் பெற சந்தித்ததாக சுரேஷ் சந்திரா டிவிட்டரில் அறிவித்தார்.
அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் கடந்தாண்டு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் இதுவரை அஜித் பைக்கில் பயணம் செய்து கடந்த 10 மாதங்களாக 3 கட்டமாக சென்ற ஊர்களின் வரைபடத்தையும் எந்த வழியாக அந்த ஊர்களை அடைந்தனர் என்பதையும் இந்திய வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் 30க்கும் மேற்பட்ட நகரங்களை பைக் மூலம் சாலை வழியாகவே கடந்துள்ளார் அஜித்.
மேலும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது ரஷ்யா முழுவதும் பயணம் செய்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஐரோப்பா முழுவதும் பைக்கில் பயணம் செய்ய அஜித் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.
AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்குகி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.