தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழில் அமராவதி துவங்கி இதுவரையில் 60 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அஜித்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பொதுவெளியில் அதிகம் பேசாதவராக அறியப்படும் அஜித் குமார் விரைவில் அரசியலுக்கு வருவார் என மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதனை மறுத்துள்ளார் நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.
அரசியல் பிரவேசம்
"நடிகர் அஜித் குமார், விரைவில் அரசியலுக்கு வருவார். அதற்காக அவர் தயாராகி வருகிறார்" என மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இது தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இதை மறுத்துள்ளது நடிகர் அஜித் தரப்பு.
எண்ணமே இல்லை
நடிகர் அஜித் குமார் அரசியலுக்கு வருவார் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் தெரிவித்து இருந்த நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதற்கு டிவிட்டர் வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்,"நடிகர் திரு. அஜித் குமார் அவர்களுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுபவர்களை ஊடக அன்பர்கள் ஆதரிக்க வேண்டாம்" என கிளியர் கட்-டாக குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன்பே பல சமயங்களில் நடிகர் அஜித் அரசியலுக்கு வருவார் என்ற வதந்திகள் கிளம்பி வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து ஒருமுறை விளக்கம் அளித்த நடிகர் அஜித்," அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. வாக்கு அளிப்பது மட்டுமே என்னுடைய அரசியல் பணி" என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அஜித் அரசியலுக்கு வருவார் என்ற தகவல் கிளம்பியதும் அதனை மறுக்கும் விதமாக சுரேஷ் சந்திரா ட்வீட் செய்ததும் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.