பிரபல நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளை நடிகர் ஆதி, நமக்கு பிரத்தியேகமாக பகிர்ந்திருக்கிறார்.
2000-ஆம் ஆண்டுகளில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறியப்பட்ட ஆனந்த கண்ணன் அதன்பிறகு நடிகராகவும் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சிறந்த தொகுப்பாளராகவும் மலர்ந்தார். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மரபுவழி கலைப்படைப்புகளை ஊக்குவிக்கும் பல்வேறு வகையான அரிய செயல்பாடுகளை செய்து வந்த ஆனந்த கண்ணன் திரைத்துறையில் நடிகராக மட்டுமல்லாது கூத்துப்பட்டறை, தெருக்கூத்து உள்ளிட்ட விஷயங்களை ஊக்குவிக்கவும் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆதி, ஆனந்த கண்ணன் பற்றிய தம்முடைய நினைவுகளைப் பகிர்ந்து இருக்கிறார்.
“ஆனந்த கண்ணனின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. சில உறவுகளைப் பொருத்தவரை நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாட்கள் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனந்த கண்ணனுடன் எனக்கு இருக்கும் உறவு அப்படியானது தான். நாங்கள் பெரிதாக தொடர்பில் இல்லை. எனது 2, 3 நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியிருந்தார். நான் ஒரு இண்டர்வியூக்காக ஸ்டூடியோவுக்கு போயிருந்தபோது சந்தித்தேன்.
அவரது மறைவு செய்தியை நான் கேட்ட பிறகு ஒரு பத்து நிமிடம் ஷாக் ஆகிவிட்டேன். எனக்கு அவருடன் இருக்கும்போது ஒரு பாசிட்டிவான ஒரு வைப்ரேஷன் இருந்தது. நையாண்டியும் நகைச்சுவையும் மிக்க ஒருவர். கொஞ்ச நேரம் தான் அவருடன் செலவிட முடிந்தது. அதனாலேயே என்னவோ அவரது மறைவு செய்தியைக் கேட்டதும் அதிர்ந்து விட்டேன்.
எனக்கு நினைவிருக்கும் வரை, ஆனந்தக் கண்ணனுடன் இருந்தவை எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்தான். பொதுவாகவே நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அசௌகரியமாக உணர கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் ஆனந்த கண்ணன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில், முழு நிகழ்ச்சியையும், ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறோம் என்பதையே மறந்து மகிழ்ச்சியாக இருக்க தொடங்கினேன். அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் எப்போதும் ஒரு இனிய புன்னகையை கொடுப்பார்.
அவருடனான நேர்காணல் நேரத்தில், அவருடன் சந்தித்து செலவிட்ட நேரம் தான். ஆனால் அவை மறக்க முடியாமல் இருக்கின்றன. என்னுடைய சமூகவலைதளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளேன். அவர் இளைஞர் தான் என்றாலும் அவர் முகம் குழந்தை முகம் போல் இருக்கிறது. நாம் வளரவளர நமக்கு தெரியாமலே நம் முகத்தில் ஒரு அனுபவம் கூடும். ஆனால் அவருடைய முகம் இன்னும் இளமையாகவும் குழந்தைமையுடனும் இருக்கிறது.
நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும். அதையே அவர் செய்தார். மற்றபடி அவர் பெரிய நடிகராக இருந்து இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை எல்லாம் தாண்டி, எங்கு இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை எல்லோரும் செய்ய வேண்டியது என்றில்லை. சந்தோஷம் தான் இருக்க வேண்டும். நாம் நாம் செய்யவேண்டிய முயற்சிகளையும் பணிகளையும் தொடர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம். அவர் என்ன செய்தாரோ.. அது அவருக்கு சரியாகவே இருந்தது.
ஆனந்த கண்ணன், நாங்கள் உங்களை மிஸ் பண்ணுகிறோம். உயிருடன் இருக்கும்போது சிலருடன் நாம் தொடர்பில் இருக்க மாட்டோம். அவருடன் இருக்கும் பொழுது எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியான வைப்ரேஷன் இருந்தது என்பதை அவரிடம் நான் பகிர்ந்து கொண்டதேயில்லை. அவரை மிகவும் பிடிக்கும். ஆனந்த கண்ணன் அதே மகிழ்ச்சியுடன், மீண்டும் எங்காவது பிறப்பார் நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.