இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகிய படங்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.
அண்மையில் ராக்கெட்ரி: தி நம்பி விளைவு படத்தை நடித்து இயக்கிய மாதவன், தனது மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளதாக வீடியோ ஒன்றை கடந்த வருடம் பதிவிட்டிருந்தார். அப்போது நடிகர் மாதவன் மகன் வேதாந்த் பிரபலமானார். இப்படி தனது மகனுடைய சாதனைகளை அவ்வப்போது சமூக வலை தளங்களில் பகிர்ந்துகொள்வது நடிகர் மாதவனின் வழக்கம்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதன், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 5 ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) போட்டிகளில் வேதாந்த் மாதவன் பதக்கங்களை வென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். எட்டு இடங்களில் நடைபெற்ற 27 வகை விளையாட்டில் மொத்தம் 6,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று இருந்தனர். இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி என பல பிரிவுகளில் பதக்கங்கள் வென்றுள்ள வேதாந்த்தின் அடுத்த வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். ஆம், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற வேதாந்த் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இவரை திரை, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.