நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்குநர் ஹரி அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தையொட்டி பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்த இயக்குநர் ஹரி, நம்மிடையே பல சுவாரஸ்ய தகவல்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துள்ளார். அதில் ஆக்ஷன், காமெடி எல்லாம் ஓகே, ஆனால் ரொமான்ஸ்க்கான விஷயங்களை உங்கள் படத்தில் எப்படி உருவாக்குகிறீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய இயக்குநர் ஹரி, “ரொமான்ஸ்க்கு நான் எங்க போறது.? எங்க போய் கத்துக்குறது.? (சிரிக்கிறார்) ஒரு ரவுடி பையன் ஒரு பொண்ண விரும்புறது பகல் நிலவு படத்துல இருக்குற டெம்ளேட் தான்.. ஒரு கணவன் மனைவி உறவா அது மௌன ராகம் தான். இப்படி மணி சார் படங்கள் பார்த்து தான் நமக்கு கிடைக்குது. அதுக்கு முன்னாடி நிறைய இருந்தாலும், நான் எனக்கு பெர்சனலா சொல்றேன். சில நேரங்கள்ல வீட்ல நடக்குற சின்ன சின்ன விஷயங்களை அப்படியே கொண்டு வருவோம்.!” என்று பதில் கூறினார்.