சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் பரபரப்பாகி வருகின்றன.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதன் பேரில் சில பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம், “நான் கலாஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவி. ஒரு பிரச்சனையை ஒரு பக்கம் மட்டுமே இருந்து பார்க்க கூடாது. நான் படித்த வரை எனக்கு எந்த விதமான பாலியல் தொல்லையும் ஏற்பட்டதில்லை. அதே சமயம் இந்த மாணவிகளை அழுத்தம் தந்து இப்படி பேச சொல்வதாக எண்ணுகிறேன். இதே போல் இவர்களை இப்படி பேச சொல்லும் ஆசிரியர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அறிகிறேன்” என்று குறிப்பிட்ட அவர்களின் பெயரை பேட்டியில் கூறி இருக்கிறார்.
மேலும் பேசியவர், “10 வருடமாக இந்த பிரச்சினை நடக்கிறது என்று சொல்கிறார்கள். நான் அதே 10 வருடத்துக்கு முன்பு இங்கு படித்தவள்தான் என்கிற முறையில் இதை பேசுவது என்னுடைய பொறுப்பு, கலாஷேத்ராவுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் எனும்பொழுது நான் குரல் எழுப்புகிறேன், மாணவர்களுடன் நேராக நான் பேச விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரதியாக பேட்டி அளித்திருக்கும் நடிகை அபிராமி கலாஷேத்ரா குறித்த தன்னுடைய கருத்துக்கள் மற்றும் பேச்சுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அதன்படி, கலாஷேத்ரா என்கிற பெயரை உச்சரிக்க தெரியாதவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். கலாஷேத்ராவில் படித்தவர் என்கிற முறையில் அதன் பாரம்பரியம் குறித்து தனக்குத் தெரியும் என்றும் அந்த நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் பேசுகிறார்கள் என்றும் அபிராமி குறிப்பிட்டு இருந்தது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதில் அளித்த அபிராமி வெங்கடாசலம், “நான் சொன்ன விஷயம் அந்த ரீதியில், அந்த புரிதலில் இல்லை. நிச்சயமாக எப்போதும் நான் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி தெரியாதவர்கள், அதாவது என்ன விஷயம் நடந்தது? மாணவிகளுக்கு உண்மையிலேயே இப்படி நடந்திருக்கா? என்று விவரம் புரியாதவர்கள் கூட கலாஷேத்ரா குறித்து குற்றம் சாட்டி இப்படி பேசுகிறார்கள். தாங்களாக அவற்றுக்கு உருவகம் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதை குறிப்பிடவே அந்த மாதிரியான ஒரு Text பயன்படுத்தினேன். மற்றபடி, யாரையும் கீழே இறக்கி பேசவேண்டும் என்று அப்படி பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.