#5YEARSOFYENNAIARINDHAAL: அருண்விஜய் - தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவை! AN INSPIRING JOURNEY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண்விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிறது. இந்த 25 வருடத்தில், அருண்விஜய்க்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுகொடுத்த அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 5 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியானது. தோல்விகளையும் அவமானங்களையும் தாண்டி அருண்விஜய் சாதிக்க கடந்து வந்த பாதை.. ஒரு பார்வை.

அப்பா விஜயகுமார் மிகப்பெரிய நட்சத்திரம். சிவாஜி, கமல், ரஜினி என உச்ச நட்சத்திரங்கள் படங்களில் எல்லாம் கலக்கியவர். அதனால் சின்ன வயதில் இருந்தே சினிமா ஆர்வம். லயொலா கல்லூரியில் படிப்பு, முதல் படத்துக்கு முன்பே டான்ஸ், ஃபைட் என கற்றுக்கொள்ளும் ஆர்வம்.  1995-ல் சுந்தர்.சி இயக்கத்தில் அறிமுகமான படம் 'முறை மாப்பிள்ளை'. படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய வெற்றிப் பெற முடியாமல் போனாலும், அருன் விஜய்யின் பர்ஃபார்மன்ஸ் கவனிக்கப்பட்டது. இதையடுத்து வந்த ப்ரியம் படத்தில், 'தில்ருபா தில்ருபா' பாடல், அன்றைய இளசுகளின் துள்ளலாக அமைந்தது. இதற்கு பின் வெளியான, காத்திருந்த காதல், கங்கா கௌரி,  கண்ணால் பேசவா, அன்புடன் ஆகிய படங்கள் அருண்விஜய்க்கு பெரிய வெற்றி தராமல் போனது.  பாலசேகரன் இயக்கிய துள்ளித்திரிந்த காலம் மட்டுமே பேசப்பட்டது.

இத்தனை படங்கள் நடித்தும் பெரிய வெற்றியை அடையாமல் போகிறேதே என்ற வருத்தம் ஒருபக்கம் இருக்க, 2001-ல் பாண்டவர் பூமி படம் வந்தது. முதல் முறையாக அப்பா விஜயகுமாருடன் சேர்ந்து நடித்தார். படமும் வெற்றியடைந்தது, அருண்விஜய்யின் அடக்கமான நடிப்பும் பாராட்டப்பட்டது. இதையடுத்து வந்த இயற்கை படத்தில் அருன் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், ஷாம்மே அதிகமாக கவனிக்கப்பட்டார். ஜனனம் படம், அருண்விஜய் மிகவும் எதிர்ப்பார்த்த ஒன்று. அப்படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தார். ஆனால் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைய, அருண்விஜய்யின் உழைப்பு வெளியில் தெரியாமல் போனது.  அடுத்தடுத்து வந்த, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தவம், வேதா படங்களும் தோல்வியை தழுவின. இதற்கு பின்னரே அருன்குமாராக இருந்த அவர் அருன் விஜய்யாக மாறினார். அப்போது வந்த மலை மலை, மாஞ்சா வேலு, தடையற தாக்க உள்ளிட்ட படங்கள் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக மக்கள் மனதில் பதிய வைத்தார் அருன் விஜய். ஆனால் அதற்குள் அறிமுகமாகி 17 வருடங்கள் ஓடிவிட்டது. மிகப்பெரிய நட்சத்திரத்தின் மகன், பல வருட சினிமா அனுபவம் என இருந்தும், தனக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையே என்ற என்னம் மட்டும் அருண்விஜய்யின் ஆழ்மனதில் அகலாமல் நின்றது.

2015-ல் என்னை அறிந்தால் ரிலீஸ். 20 வருட போராட்டத்துக்கு பலனாய் கிடைத்தது விக்டர் வேடம். வில்லனாக அஜித்துடன் மோதும் காட்சிகளில் அருண்விஜய் காட்டிய திமிரும் கெத்தும் பார்ப்பவர்களை மிரள செய்தது.  அதிலும் சத்யதேவ்-விக்டர் ஃபோன் பேசும் காட்சிகள் பக்கா Cat and Mouse game ரகம். ஃபிட்டான பாடி, நச்சென்ற  வெள்ளை சட்டை, அசால்ட்டான உடல் மொழி என அருண்விஜய் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டினார். க்ளைமாக்ஸ் காட்சியில் 'எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் நேரம் வரும்...' என கவுதம் மேனன் எழுதிய வசனங்கள் விக்டருக்கு மட்டுமல்ல, அருண்விஜய்க்கும் பொருந்தி போனது. அன்றிலிருந்து விக்டர் தல ரசிகர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் All time Favourite ஆனான்.

அதை தொடர்ந்து தெலுங்கில் ராம்சரன் படம், கன்னடத்தில் சக்ரவியுஹா என தன் வில்லத்தனத்தால் ரசிகர்களை விசிலடிக்க வைத்தார் அருண்விஜய். தமிழில் வெளியான குற்றம் 23 படமும் அருண்விஜய்க்கு நல்ல படமாக அமைய, 2018-ல் மணிரத்னமுடன் கை கோர்த்தார் அருன் விஜய். தியாகு கேரக்டரில், கூலான ஆளாக வரும் அருண்விஜய், வீட்டுக்குள் தடாலடியாக நுழைந்து 'டேய் அண்ணா.. எங்கடா இருக்க' என சுற்றி சுழன்ற காட்சி, அருண்விஜய்யின் க்ளாசிக் சீன் ஆனது. இதையடுத்து வந்த 'தடம்' அருண்விஜய் சினிமா வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது. கவின், எழில் என இரு கதாபாத்திரங்களில் வெவ்வேறு உடல் மொழியுடன் வெரைட்டி காட்டினார். 2019-ஆம் வருடத்தின் மிகச்சிறந்த படமாக இது அமைய, ப்ரபாஸ் நடித்த மெகா பட்ஜெட் படமான சாஹோவில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார் . இதோ இப்போது மாஃபியா வர போகிறது. மிடுக்கான ஸ்டைலில் வேடனாக கலக்கவிருக்கிறார் அருண்விஜய். இன்று தமிழ்சினிமாவில் மிகவும் தவிர்க்கமுடியாத ஒரு ஹீரோ ஆகிவிட்டார். தனக்கான அங்கீகாரத்தையும் அடைந்துவிட்டார்.

ஆனால், அந்த அங்கீகாரம் அப்படி ஒன்றும் அல்வா போல அருண்விஜய்க்கு கிடைத்துவிடவில்லை. தோல்விகளும் அவமானங்களும் அவரின் பல நாள் உறக்கத்தை கண்டிப்பாக கெடுத்திருக்கும். தனக்கு பிறகு வந்த நடிகர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருந்த வேளையில், அருண்விஜய் இன்னும் வீரியமாக போராட வேண்டியிருந்தது. அவரும் போராடினார் ! பீனிக்ஸ் பறவையாக எரிந்த சாம்பலில் இருந்து எழுந்து வந்து மீண்டும் உயரே பறந்தார் அருண்விஜய் ! தனது சிலையை தானே செதுக்கிய சிற்பியாக நம் முன்னே நிற்கும் அருண்விஜய்... அனைவருக்குமான ஒரு இன்ஸ்பிரேஷனல் பாடம். இன்னும் பெரிய இடங்களுக்கு அவர் செல்வார் என்றே நம்பிக்கை வைப்போம். அப்படியான நம்பிக்கை தான் அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கை.!

தொடர்புடைய இணைப்புகள்

A note on arun vijay's inspirational journey in tamil cinema

People looking for online information on Arun Vijay, Mafia will find this news story useful.