தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் தேர்தல் விதிமுறைகளில் ஒன்றான 49P என்ற பிரிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக இந்தியா வரும் விஜய்யின் ஓட்டுக்கு பதில் கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கும். அதையடுத்து, கள்ள ஓட்டை தடுக்கும் சட்டப்பிரிவான 49P கீழ் வழக்கு தொடர்வார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் 49P என்ற சட்டப்பிரிவு என்பது ஒரு நபரின் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவானால், ஓட்டுக்கு உரிய நபர் மீண்டும் வாக்களிக்க முடியும். இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவான 49P குறித்த தகவல்கள் விஜய்யின் சர்கார் படத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நேற்று (ஏப்.18) நடைபெற்றது. அதில், நெல்லை மாவட்டம் பணகுடி வாக்குச்சாவடி எண் 48ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டது.
இது தொடர்பாக மணிகண்டன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49P தேர்தல் விதிப்படி மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின் பேரில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
49P பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்து, தனது ஓட்டு உரிமையை திரும்பப்பெற உதவியதற்காக மணிகண்டன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.