சில சமயம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் சினிமாவையே மிஞ்சி விடும். சினிமாவை விட பரபரப்பான ஒரு சம்பவத்தை தன் வாழ்க்கையில் சமீபத்தில் நடத்தி காட்டினார் சுரேஷ். யார் சுரேஷ், என்ன நடந்தது?
அன்று ஞாயிற்றுக்கிழமை. கோயம்புத்தூரில் வசிக்கும் சுரேஷ்குமாருக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து ஒரு ஃபோன் கால் வந்தது, அவரது வீட்டு முகவரிக்கு பைக் ஒன்று அனுப்பப்பட தயாராக இருப்பதாக கூறினார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சுரேஷின் பைக் திருடப்பட்டிருந்தது. அது தன்னுடைய பைக்தான் என்பதை உடனே உணர்ந்தார். பைக்கைத் திருடிய நபர் வாகனப் பதிவுச் சான்றிதழில் இருந்த உரிமையாளரின் முகவரிக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.
கண்ணம்பாளையத்திலுள்ள தனது லேத் பட்டறைக்கு அருகே பைக்கை நிறுத்தி வைத்திருந்தார் சுரேஷ். மே 18 மதியம் 1 மணியளவில், பைக்கை எடுக்க வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி, அவரது பைக் அங்கு இல்லை. உடனே ஒரு புகாரோடு சுளூர் போலீஸை அணுகினார். காவல்துறையினர் COVID-19 பணிகளில் மும்முரமாக இருப்பதால், இந்த பைக் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை லாக்டவுன் முடிந்த பின்னர்தான் தொடங்க முடியும் என்று கூறிவிட்டனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்தில் தனுஷ் தொலைந்த தனது பைக்கை தேடும் வேட்டையில் இறங்கியது போல தானும் களத்தில் இறங்க முடிவெடுத்தார் சுரேஷ்.
தன் பைக் காணாமல் போன இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் முதல் கட்ட விசாரணையை தொடங்கினார். லேத் பட்டறைக்கு அருகிலுள்ள ஒரு கடையில் சி.சி.டி.வி கேமராவிலிருந்து ஒரு காட்சி தென்பட்டது. அது சுரேஷின் பைக்கில் ஒரு நபர் கிளப்பி தப்பி ஓடுவதை பதிவு செய்திருந்தது. உடனே அருகிலிருந்தவர்களிடம் மேலும் விசாரித்து, அக்காட்சியை வாட்ஸ்அப்பில் தனக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பத் தொடங்கினார் சுரேஷ். ஒருகட்டத்தில் தன் பைக்கைத் திருடியது பிரசாந்த் எனும் நபர்தான் என்பதை கண்டுபிடித்தார்.
மன்னார்குடியில் வசிக்கும் பிரசாந்த் (30) கோயம்புத்தூரில் ஒரு பேக்கரியில் வேலை செய்பவர். மே 18 ஆம் தேதி மதியம் சுரேஷ்குமாரின் பைக்கை திருடிய கையுடன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
சுரேஷ் கோவையின் புறநகரில் தங்கியிருந்த பிரசாந்தின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது, பிரசாந்த் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்ட தகவல் அவருக்குக் கிடைத்தது. உடனே மன்னார்குடிக்கு கிளம்பினார் சுரேஷ்.
இதற்கிடையில், மன்னார்குடியை அடைந்த பிறகு பிரசாந்த் பைக்கின் உரிமையாளரான சுரேஷ்குமார் நேரிடையாக தேடுதல் வேட்டையில் இறங்கி, உண்மையைத் தெரிந்து கொண்டு தன்னை தேடி வருகிறார் என்று தெரிந்து கொண்டார். உடனே அங்கிருந்து தப்பித்தார்.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் சுரேஷ். ஆனால் இதை விடுவதில்லை எப்படியாவது பிரசாந்தை சிக்க வைத்துவிடலாம் என்ற முயற்சியில் இருந்தபோதுதான் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கூரியர் அலுவலகத்திலிருந்து சுரேஷுக்கு அழைப்பு வந்தது, அவரது பைக் வீடு திரும்ப தயாராக உள்ளது என்ற செய்தியை தெரிந்து கொண்டார். பிரசாந்த், சுரேஷின் பைக்கை வாகனத்தின் பதிவு சான்றிதழில் காணப்பட்ட முகவரிக்கு கூரியர் செய்திருந்தார், தன்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்து பயந்த பிரசாந்த் பைக்கை திருப்பி ஓனருக்கே அனுப்பிவிட்டார்.
சுரேஷ் தனது பைக்கைப் பெற ரூ .1,400 ஐ ‘லக்கேஜ் மற்றும் பேக்கேஜிங் கட்டணமாக’ செலுத்த வேண்டியிருந்தது. பிரசாந்த் மீது வழக்கைத் தொடரப் போவதில்லை என்றும், தனரது பைக் நல்ல நிலையில் இருப்பதாகவும் சுரேஷ் குமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஆண்களைப் பொருத்தவரையில் பைக் என்பது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. சிலர் தங்கள் பைக்குக்கு பெயர் வைத்து பொன்னாய் பூவாய் பத்திரமாக வைத்திருப்பார்கள். சுரேஷுக்கும் அப்படித்தான். மேலும் பைக் அவரது வேலைக்கு மிகவும் முக்கியம். பைக் தொலைந்ததும், புகார் மட்டும் கொடுத்து நின்றுவிடாமல், தானே நேரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியதிலிருந்து, பைக் கிடைத்தவுடன் திருடியவரை மன்னிக்கவும் செய்தார் சுரேஷ். மனிதர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருடர்கள் ஆகின்றனர் என்பதை உணரும் மனம் பலருக்கு இருப்பதில்லை. சுரேஷ் இப்போது ஒரு ரியல் லைஃப் ஹீரோவாக சோஷியல் மீடியாவில் கொண்டாடப்படுகிறார்.