90களில் பிறந்தவர்களுக்கு மறக்க முடியாத நாஸ்டால்ஜியா பலவற்றிலும் முக்கியமானவர் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்று ஞாயிற்றுக்கிழமை ஆனால் சன் டிவியில் நடக்கும் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியை நடத்தும் அப்துல் ஹமீத்.
Also Read | 'வாரிசு' படத்தின் கலை இயக்குனர் சுனில் திடீர் மரணம்.. துல்கர் சல்மான் இரங்கல்!
“லலிதாவின் பாட்டுக்கு பாட்டு .. தெ என்ற இடத்தில் மணி ஒலித்து இருக்கிறது.. நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது தே நெடில் அல்ல தெ குறில்” என்று தொடங்கும் இவரது பேச்சு இன்றும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்த இவர் பல்வேறு சுவாரஸ்ய மற்றும் தமக்கு நடந்த அதிர்ச்சிகரமான பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில், “லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தந்த வெளிச்சம் இறைவனுக்கு நன்றி செலுத்த கூடிய பல தருணங்களை உருவாக்கியத. 1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் ஏற்பட்டது. இனக் கலவரத்தின்போது புலம்பெயர்ந்து அண்டை நாடான இந்தியாவுக்கு வந்தவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, ‘அவர்கள் நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார்கள். அப்படி என்னுடைய பெயரும் உச்சரிக்கப்பட்டது. அதற்கு யாரோ ஒருவர் நானும் என் மனைவியும் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது குண்டர்கள் தடுத்து காரில் பெட்ரோல் ஊற்றி எங்களை உயிரோடு கொளுத்தி விட்டதாக ஒரு தகவலைச் சொல்லி விட்டார்கள். அது ஒரு வதந்தி தான். ஆனால் அது பத்திரிகைகளில் செய்திகளாகவே வெளிவந்தது.
அந்த செய்திகள் பின்னாளில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. என்னுடைய புத்தகத்தில் அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். அந்த வதந்திகள் உண்மை என்று பலரும் நம்பினர். அதன் பின்னர் நான் வானொலி நிலையத்துக்கு செல்லவும் இல்லை. ஏனென்றால் தமிழ் பேசி அங்கு அந்த பணியை தொடர முடியாது என்பதால். ஆனால் நான் வானொலிக்கு செல்லாததாலேயே பலரும் நான் மரணித்ததாக வந்த செய்தி உண்மை என நம்பிவிட்டனர்.
அப்போது அந்த நாளில் இருந்த பிரதம மந்திரி உண்மையில் இது பற்றி விசாரித்த போது நான் நலமாக இருக்கிறேன் என்கிற தகவலை சொன்னேன். ஆனால் தமிழ் பேசி மேலும் இலங்கையில் ஒரு பணியை தொடர முடியாது என்பதால் நான் வானொலி நிலையத்துக்குச் செல்ல வில்லை என்று தெரிவித்தேன். ஆனால் இந்த விசயங்களை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நினைத்தார்கள். அப்போது வானொலி நிலையத்திலிருந்தும், பாதுகாப்பு அதிகாரிகளும் வந்து என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு விசேஷ செய்தி அறிக்கையை என் மூலமாக வெளியிட்டார்கள். அதில் என்னுடைய பெயரை முதலில் சொல்லிவிட்டு செய்தி வாசிக்கச் சொன்னார்கள்.
எனக்கு என்னவென்று புரியவில்லை, ஆனால் நான் பணிபுரிய தொடங்கியபோது தமிழகத்தில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் கடிதங்கள் வந்தன. அதில் இருந்துதான் எத்தனை இல்லங்களில் எனக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை அறிந்தேன். அப்போது நெகிழ்ந்து போனேன். இப்படி ஒரு பாசம் நேயர்கள் உள்ளத்தில் இருந்தது கண்டும், தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்து, குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்கிற ஆதங்கத்துடன் அவர்கள் இருந்தது கண்டும் நெகிழ்ந்தேன். இதெல்லாம் எப்படி உருவானது என்று நினைத்திருந்தேன். என் அன்னை எனக்குள் விதைத்த விழுமிய பண்புகள் ஒன்று. அத்துடன் அந்த இறைவனின் கருணை. அதுதான் இத்தனை அன்புள்ளங்களை எனக்கு பெரும் சொத்தாக ஈட்டி தந்திருக்கிறது என்று உணர்ந்தேன். இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்” என தெரிவித்தார்.
Also Read | ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்.. ரஜினி வெளியிட்ட உருக்கமான இரங்கல்.!.!