சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தின் 7-ஆம் ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.
கடந்த 2015 ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் வெளியான என்னை அறிந்தால் படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆஸ்திரேலிய நாட்டை சார்ந்த ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
படத்தின் கதையாக சத்யதேவ் எனும் மனிதனின் விதியால் 8 வயது முதல் 40 வயது வரை நடக்கும் சம்பவங்களே கதையாகும். சிறுவயதில் சத்யதேவ் அம்மா சத்யதேவை மருத்துவராக்க விரும்புகிறார். தந்தை நாசரோ இதயம் சொல்வதை கேள் என ஒரு தந்தையாக நாசர் சிறந்த முறையில் சத்யாவுக்கு வழிகாட்டுவார். தந்தை கொல்லப்பட சத்ய தேவ் நன்மை, தீமை பாதையில் நன்மையின் பக்கம் திரும்புவார்.
நாசர் கொல்லப்படும் காட்சியில் அந்த உணவகத்தில் சர்வராக இருக்கும் சிறுவயது அருண் விஜய் டேனியல் பாலாஜியின் தாக்கத்தால் தீமையின் பக்கம் செல்வார். (சிறுவயது அருண் விஜய் காட்சிகள் படத்தின் நீளத்தால் நீக்கப்பட்டது) . பெற்றோர்களின் மறைவுக்குப் பிறகு. சதயா தந்தையின் வார்த்தைகள் படி, போலீஸ்காரராக மாறுகிறார்.
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு குமட்டலில் தவிக்கும் அனுஷ்காவைச் சந்திக்கும் அறிமுகக் காட்சியில், அவரது கைகளில் விரல்களை வைத்து அழுத்தி அமைதிப்படுத்தும் அஜித்தின் அறிமுகக்காட்சியில், அஜித் இயல்பாகவே மருத்துவத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார் என்பதைக் இயக்குனர் காட்டுவார். அனுஷ்கா கூட டாக்டரா என்று கேட்பார். அம்மாவின் ஆசையும் சத்யா டாக்டராக வேண்டும் எனபதில் தான் இருக்கும்.
விதி பின்னர் சத்யாவை மருத்துவத்தின் பக்கம் சேர்க்கும், உடல் உறுப்பு கடத்தல் மாஃபியாவான விக்டர் மற்றும் கும்பல் சார்ந்தோரை கண்டுபிடிப்பதில் சத்யா ஈடுபடுவார். சத்யாவின் உலகம் முழுவதும் அம்மா, அப்பா, ஹேமானிகா, ஈஷாவை சுற்றியே இருக்கும்.
என்னை அறிந்தால் படம் முழுவதும் பிரசித்தி பெற்ற ARRI ALEXA கேமரா கொண்டு படம் பிடிக்கப்பட்டது. இந்த படத்திற்கு எடிட்டராக ஆண்டனி பணியாற்றினார். கௌதம் வாசுதேவ் மேனனின் முந்தைய இரண்டு போலிஸ் படங்களான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் COP TRILOGY ஆக என்னை அறிந்தால் படம் உருவானது. இந்த படம் விமர்சகர்கள், ரசிகர்களின் நல்ல பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது. பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனதால் பிப்ரவரியில் இந்த படம் ரிலீஸ் ஆனது.
விடுமுறை அற்ற தினமான பிரவரி-5, வியாழக்கிழமையில் ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை இந்த படம் குவித்தது. 2015 ஆம் ஆண்டில் நடிகர் அஜித்திற்கு வெளியான 2 படங்களும் (என்னை அறிந்தால், வேதாளம்) நல்ல வெற்றியைப் பெற்றன. இந்த படத்தில் அஜித் குமார் உடன், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா ஷர்மா, ஆசிஷ் வித்யார்த்தி, கலை இயக்குனர் ராஜீவன், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் நடிகர் அருண் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் முன்னணி நடிகராக உருவெடுத்தார். இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் 7 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் நடிகர் அருண் விஜய், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், எடிட்டர் ஆண்டனி பங்கேற்று கேக் வெட்டினர்.
நடிகர் அருண் விஜய், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கேக் ஊட்டி விட்டார். இந்த புகைப்படங்களை அருண்விஜய் டிவிட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்து. விக்டர் பிறந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது என கூறி, நடிகர் அஜித் குமாருக்கும், இயக்குனர் கௌதம் மேனனுக்கும் நன்றி கூறியுள்ளார்.