44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மகாபலிபுரத்தில் வைத்து, வருகிற ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள, சுமார் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 2000 செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பியாட் தீபத்தினை ஏற்றி வைத்து, தீபச்சுடர் ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட்
இந்த ஒலிம்பியாட் தீபம், மொத்தம் நாற்பது நாட்களில், இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள சுமார் 75 நகரங்களில் பயணித்து, பின்னர் இறுதியாக மாமல்லபுரம் வந்தடைய உள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடர்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கான ஏற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் டீசர்
இந்நிலையில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான வீடியோ ஒன்றின் டீசர், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரும் தோன்றி உள்ளனர்.
மாஸ் காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான்
பிரபல இயக்குனரின் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். மேலும், வெளியான டீசரில், மிக அசத்தலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடை போட்டு வரும் காட்சிகளும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள நிலையில், முழு வீடியோ ரீலீஸையும் பலரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.