ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும், அடுத்த ஆண்டில் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கிறதோ என்ற எதிர்ப்பார்ப்புடன் இருந்த காலம் போய், வரும் ஆண்டில் என்னென்ன ஆப்புகள் ரெடியாக இருக்கிறதோ என்று சிந்திக்க வைத்துவிட்டது இந்த 2020. ஒரே ஒரு வைரஸ்தான்., டோட்டல் வருஷமும் க்ளோஸ் என்பது போல இந்த மொத்த வருடத்தையும் குத்தகைக்கு எடுத்து கும்மியடித்துவிட்டது கொரோனா.
அப்படி கொரோனா உடைத்த ஃபர்னிச்சர்களில் தமிழ் சினிமாவும் தவறவில்லை. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்புகள் ரத்து, படங்களின் ரிலீஸ் தள்ளி வைப்பு என ஊரடங்கில் சிக்கி தவித்தது நமது தமிழ் சினிமா. அப்படியான 2020-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை கொஞ்சம் ஆர்டராக அசைபோடலாமா..?!!
எப்போதும் போலவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், படங்கள் இயல்பாக தியேட்டர்களில் வெளியாக, அதில் சில படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் பெரிய வெற்றியை அடையமுடியாமல் போக, பெரிய ஹீரோக்களின் படங்களையும் ஓரங்கட்டிவிட்டு திரையரங்குகளில் ஹிட் அடித்தது இரண்டு இளம் இயக்குநரின் திரைப்படங்கள். அவை தேசிங்கு பெரியசாமியின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் 'ஓ மை கடவுளே'. துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சணி என இளசுகளை வைத்து கொண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரோலர் கோஸ்டர் ரைட் அடிக்க, அசோக் செல்வன், ரித்திகா, வாணி போஜன் கூட்டணியில் கலர்ஃபுல் காதலில் கதைப்போமா என கலக்கியது ஓ மை கடவுளே. இரண்டு திரைப்படங்களும் இளைஞர்களிடையே பெரிய வரவேற்பை பெற, தியேட்டர்களிலும் நல்ல கூட்டத்தை பார்க்க முடிகிறது என மகிழ்ச்சி கொண்டனர் தியேட்டர் உரிமையாளர்கள். கூடவே, ஆயிரம் காரணம் சொன்னாலும், நல்ல படங்களுக்கு எப்போதுமே மக்கள் வரவேற்பு கிடைக்கும் என்பதை நிருபித்து காட்டியது இந்த இரு திரைப்படங்களும்.!
அடுத்தது யாரு.., தளபதிதான். விஜய்யின் மாஸ்டர் பட ஷூட்டிங் நெய்வேலியில் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்க, விஜய் வீட்டில் நடந்த ரெய்டு, விஷயத்தை பிரேக்கிங் நியூஸாக மாற்றியது. இதை தொடர்ந்து விஜய் படப்பிடிப்பில் இருந்து சென்னை வர, ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை என்பதுடன் பிகில் வசூலையும் அறிக்கையாக கொடுத்தனர். ஆனால் நெய்வேலியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அனுமதி தரக்கூடாது என பாஜகவினர் போராட்டம் நடத்த, இன்னொரு பக்கம் தளபதியின் தரிசனத்திற்காக கூடியது பெரும் ரசிகர் கூட்டம். விஜய்யின் மாஸ் ஸ்டேட்டஸ் சோஷியல் மீடியாவை அதிர வைக்க, வேன் மீது ஏறி தளபதி எடுத்த செல்ஃபி, தோனி அடித்த சிக்சராக ஃபினிஷிங் கொடுத்தது. இந்த வருடத்தில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பிரபலத்தின் ட்வீட்டாகவும் இந்த போட்டோ ட்விட்டரில் இடம்பிடித்து கூடுதல் சிறப்பை சேர்த்தது.
2020-ல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரிடியாக ஏற்பட்ட சோகம் பாடகர் எஸ்.பி.பியின் மறைவு. தனது கானக்குரலால் என்னற்ற பாடல்களின் மூலம் மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இசை உலகமே பரிதவித்து போனது. அவர் மீண்டும் நலம்பெற்று வரவேண்டும் என தங்கள் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வேண்டினார்கள் ரசிகர்கள். இசைஞானி இளையராஜா தொடங்கி பல்வேறு பிரபலங்கள் அவர் நலம்பெற வேண்டினர். ஆனால், செப்டம்பர் 25-ஆம் தேதி, இந்த காந்தர்வ குரலோன் நம்மைவிட்டு இயற்கை எய்திய செய்தி கேட்டு, கலங்கி போனது இசையுலகம். 6 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை, கண் கலங்க அஞ்சலி செலுத்த அவர் வீட்டின் முன் குவிந்தனர். எஸ்.பி.பி போல மிமிக்ரி செய்து பாடுவோர் இங்குண்டு, ஏன் அவர் குரலையே கூட அச்சுபிசகாமல் பாடுவோறும் உண்டு, ஆனால் அந்த பாடலின் நுணுக்கங்களையும் உணர்வுகளையும் குரலில் கொண்டு வர, இங்கு யாருமே இல்லை. அதற்கு அவர் மட்டுமே நிகர்.. அதனால்தான் அவர் எஸ்.பி.பி. இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பியின் மூச்சும் அவர் பாட்டும் அணையாவிளக்கே.!!
கொரொனா வைரஸ் காரணமாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கால் சினிமாத்துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. தியேட்டர்களின் வியாபாரம் ஒருபக்கம் முடங்கி போக, படப்பிடிப்புகளை நம்பியிருந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் ரிலீஸுக்கு தயாராகி வெளியிட முடியாமல் விஜய்யின் மாஸ்டர் தொடங்கி பல சிறிய படங்கள் வரை கிடப்பில் கிடந்தன. இந்த நெருக்கடியே OTT என்ற மாற்றுவழி நோக்கி தமிழ் சினிமாவை இன்னும் வேகமாக நகர்த்தியது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் என நேரடியாக தமிழ் திரைப்படங்கள் OTT-ல் ரிலீஸாகின. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலவையாக கிடைத்து வர, எத்தனை காலம்தான் தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருப்பது என முடிவெடுத்த தயாரிப்பாளர்கள் ஆன்லைன் ரிலீஸுக்கு தயாராகினர். இதில் க/பெ.ரணசிங்கம், அந்தகாரம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் புத்தம் புது காலை, பாவக் கதைகள் என்ற அந்தாலஜி திரைப்படங்களும் முன்னணி இயக்குநர்களின் கூட்டணியில் உருவாகி ஆச்சர்யப்பட வைத்தது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம். விமான சேவை நிறுவனை கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவான இப்படத்திற்கு, அதன் அறிவிப்பு முதலே எதிர்ப்பார்ப்பு தொற்றி கொண்டது. படத்தின் பாடல்களும் டீசரும் ஆல்ரெடி வெளியாகி ஹிட் அடித்திருக்க, கோவிட் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் OTT-யில் நேரடியாக ரிலீஸ் செய்வது ஆரம்பித்திருக்க, ஒரு முன்னணி ஹீரோவாக மிக முக்கியமான முடிவை எடுத்தார் சூர்யா. அதுதான் சூரரைப் போற்று படத்தின் அமேசான் ரிலீஸ். ஒரு பெரிய ஹீரோவின் படமே இந்த மாற்றுவழி மார்க்கெட்டை இன்னும் விரிவுப்படுத்தும் என பலரும் கூறிவந்த நிலையில், சூரரைப் போற்று அமேசானில் ரிலீஸானது. இதை தொடர்ந்து, படம் பார்த்த ரசிகர்கள் மெய் சிலிர்த்து பாராட்டி படத்தை கொண்டாடினார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு சினிமாத்துறை பிரபங்கள் என சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் நம்பிக்கையின் விருட்சமானது. சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பும், சுதா கொங்கராவின் க்ளாசிக் மேக்கிங்கும் சேர்ந்த சூரரைப் போற்று 2020-ஆம் வருடத்தில் ஆழமான தடத்தை பதித்தது.
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்கள் என்று பட்டியலிட்டால், அதில் தனுஷுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு. அப்படி தன் கைகளில் பல்வேறு பிராஜட்களை வைத்து கொண்டு, பம்பரமாக சுழன்று வருபவர் தனுஷ். அவருக்கு இந்த ஆண்டு பட்டாஸ் ரிலீஸாக, சம்மருக்கு ஜகமே தந்திரம் வருவதாக இருந்தது. ஆனால், அத்திரைப்படமும் கொரோனாவால் தள்ளிப்போக, கர்ணன், அத்ரங்கி ரே, D43 என அவரின் அடுத்தடுத்த ப்ராஜக்ட்களும் ரெடியாக வெயிட்டிங்கில் இருந்தது. இப்படியிருக்க 2020-ம் வருடத்தை அலங்கரித்தது, தனுஷ் தனது ஹோம் கிரவுண்ட் யூ-டியூபில் அடித்த சிக்சர். அதுதான் ரவுடி பேபி. யுவனின் துள்ளலான இசை, தனுஷின் Take it easy பாடல் வரிகள், பிரபுதேவாவின் நடன அமைப்பு, சாய் பல்லவியின் பர்ஃபார்மன்ஸ் என ரவுடி பேபி பாடல் நிகழ்த்தியது ஒரு மேஜிக். ஊரே கூடி தேர் இழுப்பது போல், உலகமே பார்த்து இப்பாடலுக்கு குத்தாட்டம் போட, யூ-டியூப் தளத்தில் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது ரவுடி பேபி. மேலும் இன்னும் கூடதல் சிறப்பாக அவென்ஜர்ஸ் இயக்குநர் இயக்கும் தி கிரேமேன் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கும் செய்தி டிசம்பர் 18 அன்று வெளியாக, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் காலரை தூக்கி விட்டுக்கொண்டு ட்ரெண்டிங் அடித்தது.
சோஷியல் மீடியாவை பொறுத்த வரை சிம்புவின் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன.., அவரின் ஒரு போட்டோ வெளியானால் போதும். அவர்தான் அன்றைய ட்ரெண்டிங் எனும் அளவுக்கு சிம்புவின் மாஸ் சற்றும் குறையாமல்தான் இருந்து வருகிறது. இந்த சூழலில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு ஷூட்டிங் ரத்தால் முடங்கி போக, இன்னொரு பக்கம் சிம்புவின் அதிகரித்த உடல் எடையோ அவரது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்க, லாக்டவுனில் சிக்கென்று மாறி 100 கிலோவில் இருந்து 75 கிலோவுக்கு தெறி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்டினார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் அறிவிப்பு வர, அடுத்தடுத்து ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் என சிம்புவின் புதிய லுக் ஆச்சர்யம் கொடுத்து லைக்ஸ் அள்ளியது. ஷூட்டிங் முடித்த அதே ஸ்பீடோடு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு, தினம் ஒரு அப்டேட் கொடுத்து டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து அசத்தினார் சிம்பு. நிச்சயம் அவரின் ரீ-என்ட்ரி இந்த ஆண்டில் தரமான சிறப்பான சம்பவம்.
ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் ரிலீஸான படங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு கொரோனா வைரஸ் சூழலால் அது கடுமையாக குறைந்திருக்கிறது. OTT ரிலீஸ்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், இன்னும் கூட சொற்பமான படங்களே இந்தாண்டு வெளியாகியுள்ளன. ஊரடங்கின் காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டிருக்க, அந்த கொண்டாட்ட அனுபவத்தை பெரிதாக மிஸ் செய்தனர் ரசிகர்கள். மத்திய அரசின் அறிவிப்பிற்கு பிறகு மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட, தமிழகத்திலும் சில நாட்கள் கழித்து திறக்கப்பட்டது. ஆனால், இருக்கும் கொரோனா வைரஸ் அச்சத்தில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு முன்பு போல் வருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வெளியான பிஸ்கோத் திரைப்படம் கனிசமான ரசிகர்களை தியேட்டருக்குள் இழுத்து நம்பிக்கை கொடுத்திருக்கிறது. என்னதான் OTT தளங்கள் வந்தாலும், சினிமாவை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் தவறுவதில்லை என்பது மீண்டும் இந்த ஆண்டு நிரூபணமாகியுள்ளது. அவ்வகையில் மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்களும் ரிலீஸான திரைப்படங்களும் இதை மறக்கமுடியாத மொமன்ட்-ஆக மாற்றியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் என்பவர் ஒரு இயக்குநராக எப்படி அறியப்படுகிறாரோ, அதே அளவு அவர் கமலின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. பல்வேறு பேட்டிகளில் கமல் எனும் கலைஞன் மீது அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார். தனது படங்களில் கூட கமல் படங்களின் சில ரெஃபரன்ஸ்களை வைக்க அவர் தவறுவதில்லை. இப்படியான அதிதீவிர ரசிகரே, அவரை வைத்து படம் இயக்கினால் எப்படி இருக்கும்.?! என்ற எதிர்ப்பார்க்கு கிடைத்த answer-தான் 'விக்ரம்'. கமலின் பிறந்தநாள் பரிசாக டைட்டில் டீசர் வெளியாக, ஹாலிவுட் பட தரத்தில் இருக்கிறது என கொண்டாடியது ரசிகர் கூட்டம். மேலும் கமலின் விக்ரம் பட டைட்டிலுடன், அதே விக்ரம் படத்தின் பின்னணி இசையும் ஒலிக்கவிட்டு மாஸ்டர் இயக்குநர் மாஸ் காட்ட, 2021 ஆம் ஆண்டின் மோஸ்ட் வான்டட் படமாக மாறியிருக்கிறது விக்ரம்.
சூப்பர்ஸ்டார் ரஜினி என்றால், அவரது சினிமாவுடன் அரசியலும் சேர்த்தே அலசப்படுவது என்பது அனைவரும் அறிந்தது. அப்படி ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து பல வருடங்கள் விவாதங்களும் கணிப்புகளும் நடப்பதில் பஞ்சமில்லை. இத்தனை வருடங்கள் காத்திருந்த ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அவரது அரசியல் வருகையை எதிர்ப்பார்த்திருந்த அத்தனை பேருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸாக வந்தது டிசம்பர் 3-ஆம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31 அதற்கான தேதி அறிவிப்பு, இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல என ரஜியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் வர, ரஜினிகாந்த் தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தார். அவரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து, அவர் எப்படி செயலாற்ற போகிறார் என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்ப, திரையில் சூப்பர்ஸ்டாராக ஜொலித்தவர் அரசியலிலும் ஜொலிப்பார் என சமூக வலைதளங்களில் ஆருடம் சொல்ல தொடங்கினார்கள் ரசிகர்கள். எது எப்படியோ நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் என்ட்ரி இந்த வருடத்தில் நிகழ்ந்தது ஒரு ஸ்பெஷல் மொமன்ட்தான்.