பாடகி பெண்ணி கிருஷ்ணகுமாரின் மகளும் பாடகியுமான சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
பின்னர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்னும் சமையல் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களில் குறிப்பாக இரண்டாவது சீசனில் சிவாங்கி செய்த குறும்புகளும் சேட்டைகளும் அவரை தமிழ் ரசிகர்களின் இல்லத்துக்கு நேரடியாக சென்று அவர்களின் இதயத்தில் அமர வைத்தது.
அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் தம்முடைய ரசிகர்களிடையே தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து வரும் சிவாங்கி தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ மிகவும் உருக்கமான வகையில் இருப்பதால் ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து குறிப்பாக அதில் சிவாங்கியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக அந்த சிறுவனின் தாயார் சிவாங்கியிடம் பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்த அந்த சிறுவனின் தாயார் குறிப்பிட்டதை சிவாங்கி பகிர்ந்திருக்கிறார்.
அந்த சிறுவனின் தாயார், இது பற்றி குறிப்பிடும் போது, “என் மகனுக்கு 12 வயது ஆகிறது. அவனுக்கு ஆட்டிசம் பிரச்சனை இருக்கிறது. அவனால் திரைப்படங்களை தியேட்டரில் காண முடியாது. அது ஒரு குறுகலான சூழ்நிலையாகவும், சப்தம் கிளப்பும் இடமாகவும் இருக்கும் என்பதால் தியேட்டருக்கு நாங்கள் போவதே கிடையாது. எனவே ஓடிடியில் தான் பல்வேறு படங்களை பார்ப்பான். தெறி, மடகாஸ்கர், நானி உள்ளிட்ட திரைப்படங்கள் அவனைக் கவர்ந்தன.
அப்படித்தான் அண்மையில் நானும் என் அம்மாவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம் . அப்போது சிவாங்கி, அஸ்வின் ,புகழ் சமைத்துக் கொண்டிருந்ததை பார்த்தோம். ஆன்லைன் வகுப்புகளை போலவே இதையும் ஆன்லைனில் பார்த்ததால் என் மகனுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்துவிட்டது. எங்களுடன் சேர்ந்து அவனும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி விட்டான். நிகழ்ச்சியின் ஒவ்வொரு பிரபலம் பற்றியும் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு யார் யார் என்று அவனிடம் நான் பகிர்ந்துகொண்டேன்.
ஒரு கட்டத்தில் அஸ்வின் அண்ணா, சிவாங்கி அக்கா, புகழ் அண்ணா என்று அவனே சொல்ல ஆரம்பித்து விட்டான். அதனைத் தொடர்ந்து நானும் என் மகனும் மாறி எபிசோடுகளை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அதே போல் ஒரு முறை சிவாங்கி அக்காவுடன் தானும் இணைந்து சமைக்க விரும்புவதாகக் கூறினான்.
அதற்கு நானும் நீ சின்ன பையன் இந்த ஷோ பெரியவர்களுக்கான ஷோ இதில் நீ இணைந்து சமைக்க முடியாது என்று
சொன்னேன். அதற்கு அவனோ இப்போது வேணா நான் சின்னப் பையனாக இருக்கலாம். ஆனால் 2035 ஆம் ஆண்டு நான் பெரிய பையனாக ஆகிவிடுவேன். அப்போது நான் சிவாங்கி அக்காவுடன் இணைந்து சமைப்பேன் என்று கூறினான்.” என இந்த தகவல்களை சிவாங்கியிடம் அந்த சிறுவனின் தாயார் பகிர்ந்து, சிவாங்கிக்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
இதை தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவாங்கி நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல பேருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக இப்போதிலிருந்தே பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது.