சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது, அதன்படி இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தம்முடைய வலைப்பக்கத்தில், “இவை ஆஸ்கர் விருது வெல்லத் தகுதியானவை என்று நீங்கள் நினைக்கிற 10 இளையாராஜா பாடல்களைப் பட்டியலிடுங்கள். தபேலா, டோலக்கு, மிருதங்கம் அடிப்படையிலானவற்றைத் தவிர்த்திடலாம். அவற்றுக்கு வாய்ப்பு குறைவு. சர்வதேச ரசிகர்களை மனதில் கொண்டு பட்டியலிடுவது ஏதுவாயிருக்கும்.” என கேட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும், “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, பாரதி பட பாடல்கள், காதலுக்கு மரியாதை படத்தில் என்னை தாலாட்ட வருவாளோ, சிறைச்சாலை பட பாடல்கள், ஜனனி ஜனனி பாடல், மடைத் திறந்து, சொர்க்கமே என்றாலும், புத்தம் புது காலை, நத்திங் பட் விண்ட் ஆல்பம்” ஆகிய பாடல்களை கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே பதிவர் ஒருவர், “தனித்துவமான, புதுமையான மெட்டு,இசைக் கருவிகளின் தேர்ந்த பயன்பாடு,வெவ்வேறு குரல்களின் குழுப் பயன்பாடு (chorus), பொருள்- அது கடத்தும் உணர்வு என்று என் இரசனை மற்றும் சர்வதேச சுவை எனும் அடிப்படையில் கொடுத்திருக்கிறேன். இன்னும் அவரது பல்லாயிரம் பாடல்கள் தகுதியானவைதான்” என குறிப்பிட பலரும் இதனை ஆமோதித்து வருகின்றனர்.