கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸின் வீரியம் புரியாமல் மக்கள் வெளியில் வருவதும், அவர்களை காவல்துறை கண்டிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறிவருகிறது.
யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகையை கொரோனாவின் தாக்கம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் மக்கள் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் யுகாதி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக நடிகர் பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை எதிர்கொள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 50 லட்சம் நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உயிர் கொல்லி நோயாக கருதப்படும் கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அரசு மட்டுமல்லாது மக்களும் அதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அதனால் மக்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க முயற்சிக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சோப் கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். நமக்கு தெரிந்தவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.