சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமான இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.
இதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்’ என பதிவிட்டுள்ளார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு என எதார்த்த வாழ்வியலை படமாக்கி தமிழ் சினிமாவிலும், மக்கள் மனதிலும் ஓர் இடத்தை தக்கவைத்திருப்பவர் இயக்குநர் மகேந்திரன்.
இயக்குநராக மட்டுமல்லாமல் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டிய இயக்குநர் மகேந்திரன், உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நிமிர்’ திரைப்படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்திலும் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் ‘சீதக்காதி’ படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இயக்குநர் மகேந்திரன் விரைவில் நலம் பெற ரசிகர்களும், திரை பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இயக்குநர் மகேந்திரன் விரைவில் குணமடைய Behindwoods சார்பாக பிரார்த்திக்கிறோம்.