தல அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் எதற்காக தான் நடித்தேன் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே.1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் எதற்காக நடித்தேன் என்பது குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தருமபுரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய ரங்கராஜ் பாண்டே, திரையுலகம் எனது கனவல்ல, வாய்ப்பு தேடி வந்தது. வாழ்வில் எதற்குமே இல்லை, முடியாது தெரியாது, கிடையாது என சொல்பவன் அல்ல நான். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என தல அஜித் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.
மேலும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தனது ஆர்மபக் காலம் குறித்தும், தனது கடின உழைப்பினால் கிடைத்த பலன் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.