இயக்குநரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஓவியா நடிப்பில் வெளியாகியுள்ள 90ML திரைப்படத்தை எதிர்க்காதது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமூக பிரச்னைகளுக்கும், பெண்கள் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு Behindwoods-க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் சமூகம் சார்ந்த பிரச்னைகள், பெண்கள் நலன், மீ டூ இயக்கம் குறித்தும் பேசினார்.
அப்போது, அடல்ட் ஜானரில் முன்னதாக வெளியான ‘இருட்டு அறை முரட்டு குத்து’ படத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், 90ML திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை எதிர்த்து ட்வீட் போட்டது அவர்களின் திரைப்படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி தேடித் தந்தது.
இது போன்ற திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதால், எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த படங்களுக்கு இலவச புரொமோஷன் கிடைத்துவிடுகிறது. அதன் காரணமாகவே 90ML திரைப்படத்திற்கு எதிர்ப்போ, ஆதரவோ தெரிவிக்கவில்லை. நல்ல படங்களை ஆராதிக்க வேண்டும். இதுபோன்ற படங்களை பற்றி பேசாமல் இருந்துவிட்டால் போதும். எப்போதும் நாமலே எதிர்த்து குரல் கொடுக்கக் கூடாது, மக்களுக்கு புரிய வேண்டும் என்றார்.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சாதிய கொடுமைகளை வெளிப்படையாக பேசிய அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகில் ‘மீ டூ’ இயக்கம் படு தோல்வியடைந்ததாக தெரிவித்தார். தற்போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.