தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அரசு கண்காணித்து வருகிறது. மேலும் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கூலித் தொழிலாளர்கள் தனது சொந்த மாகாணத்திற்கு கால்கடுக்க நடந்து, பசியால் சாவதை நாம் பார்த்து வருகிறோம். வீழ்ந்து கொண்டிருக்கும், பொருளாதாரம், அன்றாடங்காய்ச்சிகள் பசியால் மரணம், நமது அலட்சியம், இதெல்லாம் பார்க்கும் போது கோபம் கோபமாக வருகிறது.
இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை. இது சில்லறை அரசியலுக்கான நேரமும் இல்லை. நாளை என்ன நடக்கும், இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நேரம். கொரோனா வந்தால் மரணம் தான் என்ற எண்ணத்தை தூக்கி எறிவோம்.
சென்னை நமது மருத்துவ வசதிக்கான தலைநகரம். அதனை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றிடக்கூடாது. இதற்கான புதிய முயற்சிதான் நாமே தீர்வு எனும் இயக்கம். இது நாம் அனைவரும் பங்கேற்கவேண்டிய இயக்கம். இனிவரும் சில வாரங்களுக்கு ஜாதி மத, இன மொழி , கட்சி பேதமின்றி ஒரு கோட்டில் இணைவோம். இந்த இயக்கத்தின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம்'' என்று தெரிவித்துள்ளார்.