'அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய ஐடி துறையினருக்கு அடுத்த பேரிடி'... 'அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி அறிவிப்பு'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களை வேலையில் அமர்த்த தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்1பி விசா மற்றும் வெளிநாட்டினரை வேலையில் அமர்த்துவதற்கு உதவும் விசாக்களை ஏற்கெனவே 2020 முடியும் வரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அமெரிக்க அரசு ஒப்பந்த பணிகளில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களை வேலையில் அமர்த்த தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, அமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்தவோ, ஒப்பந்தம் செய்யவோ முடியாது. அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் வெளி நாட்டவர்கள் பெரிதும் நாடுவது இந்த ஹெச்1பி விசாவேயாகும்.

இதுகுறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப், "அமெரிக்க அரசு எளிமையான ஒரு விதியின் கீழ் செயல்படுவதை உறுதி செய்யும் உத்தரவில் இன்று நான் கையெழுத்திடுகிறேன். அது அமெரிக்கர்களை வேலைக்கு எடுங்கள், அமெரிக்கர்களுக்கு ஒப்பந்தம் கொடுங்கள் என்பதே ஆகும். எந்தவொரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு, சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தக் கூடாது. ஹெச்1பி விசா அமெரிக்க வேலைகளை அழிப்பதற்கானதல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அரசுத்துறையான டெனிஸீ பள்ளத்தாக்கு ஆணையம் தனது பணிகளில் 20% தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை வெளிநாட்டினருக்கு அவுட்சோர்ஸ் செய்யப்போவதாக அறிவித்ததால், அமெரிக்காவின் உயர் திறமை பெற்ற 200 தொழில்நுட்ப பணியாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா காரணமாக ஏற்கெனவே வேலையின்மை அதிகரித்துவரும் நிலையில், அரசு ஒப்பந்தங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வதை அனுமதிக்க முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி பேசியுள்ள ட்ரம்ப், "குடியேற்ற மசோதா ஒன்றை விரைவில் விவாதிக்க இருக்கிறோம். இதுவரை இல்லாத பகுதிகளையெல்லாம் உள்ளடக்கிய மசோதாவாக அது இருக்கும். திறமை, தகுதியின் அடிப்படையில்தான் இனி விசா. குடியேற்றம் தகுதி அடிப்படையில்தான். அது சட்ட பூர்வமாக நம் நாட்டுக்கு வருபவர்கள் நம் நாட்டை நேசிக்கும் விதமாக இருக்கும். நம் நாட்டுக்கு உதவுவதாக இருக்கும். அது நம் நாட்டுக்கு வந்து சம்பாதித்து நம் நாட்டையே வெறுப்பதாக இருக்காது" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்