"அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் நிலைமை"... 'புதிய வகை வைரஸ் அச்சத்திற்கு நடுவே'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள அந்தோனி பாசி!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என விஞ்ஞானி அந்தோனி பாசி கூறியுள்ளார்.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது 2வது கட்ட கொரோனா அலை தன்னுடைய கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த கடினமான சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,11,33,824 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,72,81,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 71 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 2,20,80,871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,375 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 1,95,73,847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,41,138 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து தற்போது பரவி வரும் புதிய வகை வைரஸால் பிரிட்டனில் இருந்து மக்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதற்கு முன் எதிர்மறையான கொரோனா சோதனை முடிவு தேவை என்ற அமெரிக்க அதிகாரிகளின் முடிவிற்கு டாக்டர் அந்தோணி பாசி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அந்தோனி பாசி, "கொரோனா பாதிப்பின் மோசமான நிலை இன்னும் வரவில்லை. கொரோனா வைரஸின் மாறுபாட்டை அமெரிக்கா கவனித்து வருகிறது. விடுமுறை பயணங்கள் கொரோனா வைரஸை பரப்புவதால் நாடு  ஒரு முக்கியமான கட்டத்திற்கு செல்லக்கூடும். இது தொடர்பான எனது கவலைகளை அதிபர் தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளேன். அடுத்த சில வாரங்களில் நிலைமை உண்மையில் மோசமடையக்கூடும்" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்