'இதுவரை இருந்த மிகப்பெரும் சவால்'... 'வெளியாகியுள்ள வாக்சின் செயல்பாட்டுக்கு உதவும் நல்ல செய்தி'... 'ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் போது வெவ்வேறு விதமாக வைரஸ் மாற்றமடைவதே பாதிப்புக்கு எதிரான வாக்சின் தயாரிப்பதில் இதுவரை மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இல்லை என்ற நல்ல செய்தி தெரியவந்துள்ளது.

இத்தாலி போலோக்னா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சுமார் 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் ஜெனோம்களை பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொண்டு உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரஸ் மரபணு வரிசைத்தொடர்களை ஆய்வுக்குட்படுத்தியதில் இது தெரியவந்துள்ளது. மேலும் சாம்பிள் ஒன்றுக்கு 7 உரு-இயல் மாற்றங்கள் கொரோனா வைரஸில் நிகழ்ந்தாலும் ஒன்றுக்கொன்று பெரிய வேறுபாடுகள் இல்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் கொரோனா வைரஸ் மிகவும் குறைவான பரிணாம மாற்றங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. இதில் நம்பிக்கை தரும் விஷயம் என்னவெனில், இதன் காரணமாக கொரோனாவுக்கு எதிராக தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், அடுத்து வரும் புதிய சிகிச்சைகள், நோய் தடுப்பு மருந்துகள் ஆகியவை திறம்பட வேலை செய்யும் என்பதே ஆகும்.

தற்போது நாவல் கொரோனா வைரஸின் 6 வகையான மாறுமைகள் இருக்கின்றன. அதில் முதல்முதலில் வுஹானில் உருவான ‘எல்’ என்ற கொரோனா மாதிரியே அசலானது. அதன் உருமாற்றமான ‘எஸ்’ வைரஸ் மாதிரி 2020 தொடக்கத்திலும், ஜனவரி மத்தியிலிருந்து ‘வி’, ‘ஜி’ ஆகிய மாறிய வகைகளும் உருவானது. தற்போது பரவலாக பரவி வரும் ‘ஜி’ கொரோனா மாதிரி ஜிஆர், ஜிஎச் என்ற துணை வகைகளாக மாற்றமடைந்துள்ளது.

மேற்கூறிய ஆய்வில் ஆய்வு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசைத் தொடர்களில் 74% ஜி-வகை, துணை வகைகளே ஆகும். இவை தவிர ஆய்வாளர்கள் வேறு சில கொரோனா  வைரஸ் உருமாற்றங்களையும் அடையாளப்படுத்தியுள்ளனர். தற்போது அதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்றாலும் கண்காணிப்பு தேவை எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்