‘ஹாய் பாஜக.. வெப்சைட் முடங்கிடுச்சா?.. எங்க கிட்ட வாங்க.. பேக்-அப் எடுத்து தர்றோம்’.. காங்கிரஸ் போட்ட ட்வீட்!

முகப்பு > செய்திகள் > Technology news
By |

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவந்துள்ள சமயத்தில் பாஜகவின் அதிகாரப் பூர்வமான இணையதளம் செயலிழந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரதிநிதிகளாக அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளனர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இணையதளம் வழியாகவும் தங்கள் கொள்கைகளை பாஜக பிரகடனப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும் ட்விட்டர் பக்கத்தோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால் மக்களுடன் எளிதில் சென்றடைகிறார்.

முன்னதாக பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கான்செப்ட் இந்தியா முழுவதும் நடப்பு ஐந்தாண்டுகளில் பரவி, பெரும் உச்சத்தை அடைந்துகொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியின் பிரதான ஆளுங்கட்சியான பாஜகவின் இணையதளம் முடங்கியுள்ளது பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு பாஜக-வின் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.bjp.org என்கிற வெப்சைட்டை கூகுளில் தேடினால்,  ‘விரைவில் இதைச் சரி செய்கிறோம். சில பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த தருணத்தில் இந்த சேவையை வழங்க முடியாததால் உங்கள் சிரமத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். மிகக் குறுகிய நேரத்துக்குள் மீண்டும் இந்த சைட் வேலை செய்யும்- இப்படிக்கு அட்மின்’ என்று ஒரு வாசகம் வருகிறது. உண்மையில் அந்த வெப்சைட்டில் ஏதேனும் அப்டேட்டுகள் நடக்கின்றனவா அல்லது ஹேக்கர்கள்தான் இந்த சைட்டை முடக்கியிருக்கிறார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் யார் தரப்பிலும் இருந்து வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘வணக்கம் பாஜக! வெகு நேரமாக உங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டதை நாங்கள் அறிகிறோம். எங்கள் உதவியை நாடினால் உங்களுக்கு பேக்-அப் எடுத்து தருவதற்கான உதவியை உங்களுக்கு நாங்கள் மகிழ்வுடன் செய்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கிண்டல் தொனியில் பதிவிடப்பட்டுள்ளது.

BJP, NARENDRAMODI, WEBNSITE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்