'இப்படி குதர்க்கமா கேட்டா என்ன செய்ய?'.. அன்புமணியைத் தொடர்ந்து முதல்வர் தவிப்பு!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக வந்திருந்தபோது, பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு முதல்வர் சொன்ன சில பதில்கள் வைரலாகியுள்ளன.

சேலத்தில் இருக்கும் 18 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் இந்த ஆண்டு,  500 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளதாகவும், அம்மா வழியில் நடக்கும் இந்த ஆட்சியின் திட்டங்களால் மக்களிடத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் செல்வாக்கு அதிகரித்துள்ளதால், வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலும் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார். மேலும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ‘கூட்டணி என்பது அதிமுகவோடு மட்டும் பாமக வைக்கவில்லை, முன்னதாக திமுக-வை விமர்சித்தபோதும் அவர்களுடன் பாமக கூட்டணி வைத்தது. கொள்கை தனி, கூட்டணி தனி. தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்ய வேண்டும் அவ்வளவுதான்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்நிலையில் நிரூபர் ஒருவர், அம்மா நினைவு மண்டபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க-வோடு கூட்டணி வைத்திருக்கிறீர்களே? என்று முதல்வரை நோக்கி கேட்டதற்கு,   ‘வேண்டுமென்றே குதர்க்கமான கேள்விகளைக் கேக்குறீங்க. வேற கேள்விகளைக் கேளுங்க’ என்று பதில் அளித்தார். அதன் பின்னரும் நிரூபர் தரப்பில் இருந்து கேள்விக்கணைகள் தொடர்ந்தன. தங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் புறவாசல் வழியாக வருகிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி கேட்டதற்கு, ‘மீடியா இப்படியெல்லாம் கேக்காம எங்களுக்கு சாதகமாக கேளுங்கள்’ என்று பதிலளித்தார்.

கடைசியாக, தமிழகத்தில் அ.தி.மு.க-பாஜக கூட்டணி இப்போது உருவாகியிருக்கிறது. இந்த கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர், ‘தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி. இந்தியாவைப் பொருத்தவரை என்.டி.ஏ தலைமையிலான கூட்டணி’ என்று பேசினார்.

முன்னதாக வேறு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸை இதே பாணியில் நிரூபர்கள் தொடர் கேள்விகளைக் கேட்டதும் குறிப்பிடத்தக்கது. 

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்