‘விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடலன்னா ஒருத்தரும் சாப்பிடக் கூடாது' : சீமானின் சர்ச்சைப் பேச்சு!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsகடலூர் மாவட்டம் வடலூரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சித்ரா, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சிவஜோதி ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், விவசாயி சின்னத்துக்கான வாக்குகளை சேகரித்தார்.
அப்போது பேசிய சீமான், நாங்கள் வெற்றிபெற்றால் "நீர்வளம் பெருகுவதற்கான திட்டம், முதல் திட்டமாக செயல்படுத்தப்படும்" என்றார். "வேளாண்மையை தேசியத் தொழிலாக மாற்றுவதுடன், அதனை அரசுப் பணியாக மாற்றிவிடுவோம். நாட்டின் முதல் மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவம், கடைகோடி மனிதனுக்கும் கிடைக்கச் செய்வோம்" என்றார்.
"முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் உடல் நலன் பாதிக்கப்பட்டபோது, அப்போல்லோ, காவேரி ஆகிய தனியார் மருத்துவமைனைகளுக்குச் சென்றனர். அப்படியென்றால் அரசு மருத்துவமனைகளின் நிலை தான் என்ன...?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "அரசை வழி நடத்தியவர்களே அரசு மருத்துவமனையை நம்பவில்லை. அரசு மருத்துவமனையில் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால், 70 நாளில் சென்ற உயிர், 7 நாளில் போயிருக்கும்" என்று சீமான் பேசியுள்ளார்.
"அரசு மருத்துவமனைகளின் தரம் சரியில்லை. ஆகையால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் முதல் அரசு ஊழியர்கள் வரை கட்டாயமாக அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைப்பெற வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம்" என்றார் அவர். ஒரு பைசா லஞ்சம், ஊழல் இருந்தாலும் விஷ ஊசி போட்டுக் கொன்று விடுவோம் என்றும் சீமான் கூறினார்.
"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனுவில் இருந்தது, ஜெயலலிதாவின் கைரேகை இல்லையென்றால், அது யார் கைரேகை" என்றும் சீமான் கேட்டுள்ளார். "போலி கைரேகை பெற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். "ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை கட்டிவைத்து தோலை உரித்துவிடுவோம்" என்றும் அவர் கூறியுள்ளார். "விவசாயி சின்னத்துக்கு ஓட்டு அளிக்கவில்லை என்றால் ஒருவரும் சாப்பிடக் கூடாது" என்று சீமான் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
OTHER NEWS SHOTS