நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் அனல் பறக்கும் கேள்விகள்.. பேச்சு!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது, ‘வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தங்கள் கட்சியின் சின்னத்துக்காக, தேர்தல் ஆணையத்திடம் முதலில் தேசிய பறவையான மயிலை சின்னமாக கேட்டதாகவும் இறுதியாக விவசாயி கரும்போடு நிற்கும் சின்னம் கிடைத்ததாகவும்’ கூறினார். பின்னர் கொள்கை முரண்பாடுகளைப் பற்றி பேசிவிட்டு, பின்பு அதே கட்சிகளுடன் கூட்டணிகள் வைப்பது எல்லாம் கவுண்டமணி சொல்வது போல, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று பேசி சீமான் கலகலப்பூட்டினார்.

மேலும் பெண்ணுரிமை, பெரியாரியம் பற்றி பேசும் திமுக, அதிமுக தலா 2 இடங்களை பெண்களுக்கு கொடுப்பதே அரிதாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்று பேசும் இந்த கட்சிகள், கூட்டணி வேட்பாளர்களைத் தவிர்த்து, தங்கள் கட்சிகளில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், ‘பல வருடங்களாக திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் அறிமுகப்படுத்திய நீட் தேர்வை திமுக வரவேற்றது. ஆனால் இப்போது இவர்களே தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்பதாக சொல்வது, நீட் தேர்வு ரத்து செய்யவிருப்பதாக சொல்வதெல்லாம் என்னவென்று சொல்வது’ என்று ஆதங்கப்பட்டார்.

மேலும், மக்களையே சந்திக்காத அம்மையார் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சர், அருண் ஜேட்லி நிதி அமைச்சரா? வார்டு கவுன்சிலருக்கு வரிசையில் நின்று ஓட்டு போடும் நாங்கள் குடியரசுத் தலைவருக்கு ஓட்டு போட மாட்டோமா? இது மக்களாட்சியா? நீங்கள் நீட்டும் இடத்தில் கையெழுத்து போடத் தயாராய் உள்ளவர்களை நீங்களே தேர்வு செய்துகொள்வீர்களா? குடியாட்சி என்கிறார்கள். குடியாட்சியின் தலைவரான குடியரசு தலைவரை குடிமக்கள் தேர்வு செய்ய முடியாது. ஆனால் இது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?  என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்தியா என்பது பல தேசிய இன மக்களின், தேசங்களின் ஒன்றியம். ஆனால் ஒற்றை அதிகாரத்தை வைத்துக்கொள்கிறது. காங்கிரஸ் அல்லது பாஜக குடும்பம் ஆள்கிறது. ஒற்றை அதிகாரத்தை கைக்குள் வைத்துக்கொண்டு எங்கள் நிதியை எல்லாம் கைவைத்துக்கொள்கிறது. இந்தியாவின் முதல் குடிமகனான பிரதமர், முதல் முதலில் தமிழ்நாட்டுக்கு ஜக்கி வாசுதேவின் சிவ இரவில் கலந்துகொள்ள மட்டுமே வந்தார், பேரிடரில் மக்கள் பாதிக்கப்படும்போது வருவதில்லை என்று சீமான் குற்றம் சாட்டினார். மேலும், இந்தி பேச தெரிந்த வட மாநிலத்தவரே எப்போதும் பிரதமராக இருக்கிறார். தமிழருக்கு அதிகபட்சமாக குடியரசுத் தலைவர் பதவியை கொடுத்தார்கள். ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் 5 ஆண்டுகள் பிரதமராக இருக்கும் வாய்ப்பை சுழற்சி முறையில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததால், இம்ரான் கான் அபிநந்தனை விடுவிக்கவில்லை. எந்த உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன? இம்ரான் கான், அவராகவே போரை விரும்பாததால் அபிநந்தனை அனுப்பி வைத்ததாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். வாரிசு அரசியல் என்பது கார்ப்பரேட் போல குடும்ப நிறுவனங்களாக ஆகிக்கொண்டிருப்பது பற்றி பேசிய சீமான், காங்கிரஸில் அண்ணன் தலைவர், தங்கை பொதுச் செயலாளாராக இருக்கிறார். இதுபற்றி அறிவுமதி, ‘தொடர்ந்து நேருவின் குடும்பம் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது என்று கூறியபோது, தொடர்ந்து நாங்கள் நேருவின் குடும்பத்திடம் நாட்டை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லுங்கள்’ என்று ஒரு கவிதை எழுதியுள்ளதாக சீமான் பேசியுள்ளார்.

நாங்கள் தமிழர்கள், இது எங்கள் தாய்நிலம், எம் மண்ணின் வளம், மக்கள் நலம், இந்த மொழி-கலாச்சாரம்-பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவதென்பது எங்கள் கொள்கை என்று முடிவு செய்திருக்கிறோம். ஆனால் தமிழரா - திராவிடரா - இந்தியரா என கமல் முடிவு செய்து கொள்கையை அறிவிக்கவில்லை, அவருடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்டவர், தமிழ்-தமிழர் என்பது அடையாளமாகவோ-தகுதியாகவோ இருக்க வேண்டியதில்லை என்பது கமலுடைய கருத்தாக இருக்கலாம். எனக்கு அதுதான் அடையாளம், தகுதி எல்லாமே என்று சீமான் கூறினார்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்